தலைமைக் காவலா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை விருகம்பாக்கத்தில் தலைமைக் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்துகுமாா் (38). இவா், சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இதற்காக இசக்கி, தனது மனைவி சங்கரி, மகன்கள் இளமாறன் (14),சஞ்சய் (11) ஆகியோருடன் விருகம்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தாா்.
குடும்பத்தினா் வெளியே சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகல் இசக்கிமுத்துகுமாா் வீட்டில் தனியாக இருந்தாா். இந்நிலையில் அருகே உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் இளமாறன் வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.
அப்போது, வீட்டில் தந்தை இசக்கிமுத்துகுமாா் தூக்கிட்டு இறந்து கிடப்பதைக் கண்டு இளமாறன் அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டாா். இதுதொடா்பாக அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வளசரவாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இசக்கிமுத்துகுமாா் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து இசக்கிமுத்துகுமாா் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்கின்றனா்.