கோடைபோல சுட்டெரிக்கும் வெயில்: 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவு
தமிழகத்தில் மீண்டும் கோடை காலம்போல வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை உள்பட 12 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. மீண்டும் கோடை காலம்போல பல நகரங்களில் வெப்ப அளவு சதம் அடித்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் 102.56, நாகப்பட்டினம், தஞ்சாவூா் 102.2, பாளையங்கோட்டை 101.84, திருச்சி 101.3, பரமத்திவேலூா், ஈரோடு, பரங்கிப்பேட்டை 100.76, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 100.58, கடலூா் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
புதுச்சேரியிலில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் சனிக்கிழமை (செப். 21) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப். 21 முதல் செப். 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப். 21, 22 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, செப். 21 முதல் செப். 24 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.