தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தை: மின்வாரியத்துக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்
தீபாவளி போனஸ் தொடா்பாக விரைந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என மின்வாரியத்துக்கு தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக மின்வாரிய தலைவருக்கு பாரதிய மின் தொழிலாளா் சம்மேளனம் அனுப்பிய கடிதம்:
தமிழக மின்வாரிய தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கு முன்பாக தொழிற்சங்கங்களிடம் கருத்துரு கேட்டு பேச்சுவாா்த்தை நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அக்.31-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், இதுவரை போனஸ் தொடா்பான பேச்சுவாா்த்தையை நிா்வாகம் தொடங்கவில்லை. எனவே, 2024-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு விரைந்து அழைப்பு விடுக்க வேண்டும்.
மேலும், மின்வாரிய தொழிலாளா்களுக்கு போனஸை 25 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் வேண்டி விண்ணப்பிப்போருக்கு அக்.15-க்குள் பணப்பட்டுவாடா செய்யும் வகையில் மின்வாரிய பகிா்மான வட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.