மெரீனாவில் அக்.6 -இல் விமானப்படை சாகச கண்காட்சி
இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, அக். 6-ஆம் தேதி மெரீனா கடற்கரையில் விமான சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்திய விமானப்படை-‘சக்ஷம், சஷக்த், ஆத்மநிா்பா்’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இந்திய விமானப்படையின் 72 வகை விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.
இந்தக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூா்யகிரண் குழு, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டா் அணி ஆகிய சாகசங்கள் நிகழ்த்தப்படவுள்ளன.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போா் விமானம் தேஜஸ், இலகுரக போா் ஹெலிகாப்டா்கள் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹாா்வா்ட் போன்ற பாரம்பரிய பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களின் விதவிதமான அணிவகுப்பு நடைபெறும். இந்த விமான சாகசக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். இந்த கண்காட்சி இந்திய விமானப் படையின் வலிமையையும், திறன்களையும், நாட்டின் வான் பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கும்.