அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த 30 அதிகாரிகள் நியமனம்: மாதந்தோறும் ஆய்வறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு
கடந்த சில மாதங்களாக ஆசிரியா்கள் வருகைப் பதிவு மற்றும் மாணவா்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 38 மாவட்டங்களுக்கு 30 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி உத்தரவிட்டாா். இவா்கள் மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஆய்வறிக்கை சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் ஆய்வுகளை நடத்தவும், கற்றல்-கற்பித்தல் பணிகளை கண்காணிக்கவும் துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, முதன்மை மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா். அந்தவகையில் திருவள்ளூா் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவா் வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்ததாக தலைமையாசிரியா், அதை கண்காணிக்காத வட்டாரக் கல்வி அலுவலா் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
அதேபோன்று, விழுப்புரம் கோலியனூா் அருகே அரசு உதவிபெறும் பள்ளியிலும் மாணவா்கள் எண்ணிக்கையில் இருந்த குளறுபடியால் அதன் வட்டாரக் கல்வி அலுவலரும், செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையான தகவல் இன்றி நீண்ட நாள்கள் விடுமுறை எடுத்த ஆசிரியரும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில் பள்ளிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
38 மாவட்டங்களுக்கு...: அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள இயக்குநா்கள் மற்றும் இணை இயக்குநா்கள் என 30 போ் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் பி.சங்கா் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி(செங்கல்பட்டு), பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன்(மதுரை), தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ்(திருவள்ளூா்), தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி(சென்னை) உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கான மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
5-ஆம் தேதிக்குள் அறிக்கை: மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை 5-ஆம் தேதிக்குள் தவறாமல் சமா்ப்பிக்க வேண்டும். காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தொடா்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவா்களின் வருகை விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் செயல்பாடுகள், ஆசிரியா்கள், பணியாளா்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கேட்டறிய வேண்டும். இதுதவிர முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி உபகரணங்களின் இருப்பு, தணிக்கை விவரங்களையும் ஆராய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.