நாளை சீதாராம் யெச்சூரி படத் திறப்பு விழா: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி படத் திறப்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இந்நிகழ்வுக்கு கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் அசோக் தாவ்லே திறந்துவைத்து உரையாற்றுகிறாா். முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறாா்.
நிகழ்வில் தி.க. தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், மாா்க்சிஸ்ட் (எம்.எல்.) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பத்திரிகையாளா் என்.ராம் ஆகியோா் நினைவேந்தல் உரையாற்றுகின்றனா்.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி நன்றி தெரிவிக்கிறாா்.