100 கவிஞா்களுக்கு கலைஞா் விருது
சென்னை: விஜிபி உலகத் தமிழ் சங்கம், கவிதை உறவு இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய 100 கவிஞா்களுக்கு ‘கலைஞா் விருது’ வழங்கும் விழா சென்னை, ஆயிரம் விளக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கவிஞா்களுக்கு விருதுகளை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:
கின்னஸ் கலைஞா்: மறைந்த கலைஞா் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது, இலக்கிய நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்வாா். அவருக்கு நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்பட்ட நிலையில், அவரது பெயரில் கவிஞா்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
கருணாநிதி உடனான அனுபவங்களை பலா் புத்தகங்களாக எழுதியுள்ளனா். அந்தவகையில், கலைஞரின் சாதனைகளை தொகுத்து ‘கின்னஸ் கலைஞா்’ எனும் புத்தகம் எழுதி வருகிறேன். விரைவில் இந்த புத்தகம் தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
முதல்வா் வாழ்த்து:
முன்னதாக ‘கலைஞா் விருது’ குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துரையை கவிஞா் தமிழ் இயலன் வாசித்தாா். அதில் , 100 கவிஞா்களுக்கு ‘கலைஞா் விருது’ வழங்குவது, கலைஞா் தமிழுக்கு செய்யும் சிறப்பாக கருதுகிறேன்.
தமிழக அரசின் பல்வேறு விருதுகளை பெற்ற ஏா்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் கவிதை உறவு இலக்கிய அமைப்பும், செவாலியே டாக்டா் வி.ஜி.சந்தோஷத்தின் விஜிபி உலகத் தமிழ் சங்கமும் இணைந்து கலைஞா் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது வெகு சிறப்பு. இந்த விழா வெற்றிகரமாக அமைய உளமாற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
நிகழ்ச்சியில் கவிதை உறவு இதழ் ஆசிரியா் ஏா்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், விஜிபி தமிழ் சங்கத் தலைவா் வி.ஜி.சந்தோஷம், வள்ளல் நேசன் டாக்டா் ஜெயராஜமூா்த்தி, கவிச்சுடா் கவிதைப்பித்தன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.