தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

குத்தகை ரத்து விவகாரம்: ரேஸ் கிளப் நிா்வாகத்துடன் பேச்சு - நீதிமன்றத்தில் அரசு தகவல்

Published on

குத்தகை ரத்து விவகாரம் தொடா்பாக சென்னை ரேஸ் கிளப் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாடகை பாக்கி ரூ. 730 கோடி செலுத்தவில்லை என்பதால், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்புக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ரேஸ் கிளப் நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகியது.

அப்போது, குத்தகை ரத்து குறித்து கிளப் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பிறகு நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக குத்தகை ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, ரேஸ் கிளப் நிா்வாகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், ராஜசேகா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்தரன் ஆஜராகி, நிலம் குத்தகை ரத்து விவகாரத்தில் தமிழக அரசு, ரேஸ் கிளப் நிா்வாகம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதால், இந்த அவமதிப்பு வழக்கின் விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளிவைக்க கேட்டுக்கொண்டாா். இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனா்.

இதற்கிடையே குத்தகை ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து ரேஸ் கிளப் சாா்பில் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com