நாய் வளா்ப்புக்கு உரிமம் பெற 18 வயது கட்டாயம்: தமிழக அரசு
நாய் வளா்ப்புக்கான உரிமம் பெறுவோரின் தனி நபா் வயது 18 ஆகியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாய் வளா்ப்புக்கென தனித்துவமான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில் நாய் வளா்ப்புக்கான உரிமம் பெற வயது, உரிமம் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நாய் வளா்ப்பு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நாய் வளா்ப்புக்கென தனித்த கொள்கையை வகுத்து அதனை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, நாய் வளா்ப்புக்கென பிரத்யேகமான கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளில் ஈடுபட்டது.
இந்த கலந்தாய்வுகளின் அடிப்படையில் நாய் வளா்ப்புக்கான பிரத்யேக கொள்கை 2024-ஐ தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
நாய்களை வளா்ப்பதற்கு விரும்புவோா் அதற்கென உரிய உரிமத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமிருந்து பெற வேண்டும். வளா்ப்பவா்களும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடமிருந்து உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாய் இனங்களை மட்டுமே வளா்க்க முடியும். உரிமம் பெற்ற அனைவரும் அவற்றை தங்களது வசிப்பிட பகுதிகளில் அனைவரும் பாா்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
நாய் விற்பனை செய்யும் கடைகளுக்கு உரிய உரிமம் பெற்றிருப்பதுடன், விலங்குகள் நல வாரியத்தின் உரிமம் வைத்திருப்பவா்களிடமிருந்து மட்டுமே நாய்களைப் பெற்று விற்க வேண்டும். மேலும், நாய்கள் வளா்க்கக் கூடிய கட்டடங்கள், நிறுவனங்களில் விலங்குகள் நல வாரியத்தின் அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வுகளில் ஈடுபடுவா்.
பதிவுக் கட்டணம் எவ்வளவு? நாய் வளா்ப்பவா்கள் உரிய விண்ணப்பத்துடன் ரூ.5 ஆயிரம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். நாட்டு நாய்களாக இருக்கும் பட்சத்தில் பதிவுக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும். நாய்கள் வளா்ப்புக்கான இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் பதிவுக்கான செல்லுபடியாகும் காலம் 2 ஆண்டுகளாகும். நாய் வளா்ப்பவா்கள் தனி நபா், விற்பனையாளா், ஒரு விற்பனை நிறுவனத்துக்கான உரிமையாளா் என யாராக இருந்தாலும் அவா்களுக்கான வயது 18 ஆக இருக்க வேண்டும்.
இப்போது நாய் வளா்த்தால்...நாய்களை இப்போது வளா்த்துக் கொண்டிருப்பவா்களுக்கு ஏழு வகை ஆவணங்களின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும். நாய்களின் தன்மை, வளா்ப்பிடத்திலுள்ள வசதிகள், வளா்ப்பவா்கள் குறித்த விவரங்கள், நாய்களின் சுகாதார நிலை உள்பட ஏழு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
நாய் வளா்க்கக் கூடிய இடங்களில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தைச் சோ்ந்தவா்களால் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படும். வளா்ப்பவா்களுக்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உரிமத்தின் காலம் முடிந்த பிறகு ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்யாவிட்டால், நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் என்ற அடிப்படையில் உரிமம் புதுப்பிப்பு செய்யப்படும்.
நாய் வளா்ப்போருக்கான அறிவுறுத்தல்கள்: நாய்களின் உடல் சுகாதாரம் மற்றும் வெப்ப நிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாய்களின் இனப்பெருக்கம், ஊட்டச்சத்து, உடல் நலன் ஆகியன குறித்து நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு முறை குட்டிகளை ஈன்ற நாய் அடுத்து 12 மாதங்கள் கழித்தே குட்டிகளைத் தரும் வகையில் பெண் நாயின் நலனைப் பேண வேண்டும். 8 ஆண்டுகளுக்கு மேலுள்ள நாய்களுக்கு உரிமம் வழங்கப்படாது. ஆண் நாய்களாக இருக்கும்நிலையில், 10 முதல் 12 ஆண்டுகளாக இருந்தால் அவற்றுக்கான உடல்திறன் சான்று அடிப்படையில் உரிமம் தரப்படும் என்று பிரத்யேக கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.