மன்னிப்பு கோரினாா் சா்ச்சை பேச்சாளா்: ஜாமீன் கோரி மனு
பள்ளியில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் மன்னிப்பு கோரிய சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸாருக்கு சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகா் அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரம்பொருள் அறக்கட்டளை நிா்வாகியான மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கடந்த செப்.7-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனது பேச்சு மாற்றுத் திறனாளிகளைபுண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்திருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடா்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி அக்.3-க்கு ஒத்திவைத்தாா்.