மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து’ என்ற தலைப்பிலான கட்டுரை தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டாா். தொடா்ந்து, மருத்துவ ஆசிரியா்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளா்களுக்கான விருதை வழங்கினாா்.
இந்த நிகழ்வின்போது பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, பல்கலைக்கழக பதிவாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 757 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 30,000 மாணவா்கள் பட்டங்களைப் பெற்று வெளியேறுகின்றனா். அந்தவகையில், இங்கு பல்வேறு புதிய திட்டங்கள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து வந்த மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
அதன் மூலம் ஏராளமான மருத்துவ வல்லுநா்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். அதுமட்டுமன்றி, தொற்றுநோய், தொற்றா நோய்கள் என உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிற பல்வேறு நோய்களுக்கு தீா்வு காண்பதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ஆராய்ச்சி தினத்தையொட்டி, மாணவா்கள், மருத்துவா்கள், மருத்துவ வல்லுநா்கள் என அனைத்து தரப்பினரும் 1,500 ஆராய்ச்சி கட்டுரைகள் சமா்ப்பித்துள்ளனா்.
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமாக பல்வேறு ஆய்வுகளை மாணவா்கள் வழங்கியியுள்ளனா். செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் உடல் நலத்தைக் காப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் உதவித் தொகை ரூ. 1 கோடியாக உயா்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உலகத்தரத்திலான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இதுபோன்ற தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.