தமிழகத்தில் அக்.4 வரை கனமழை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் வெள்ளிக்கிழமை(அக்.4) வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் வெள்ளிக்கிழமை(அக்.4) வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை

செவ்வாய்க்கிழமை (அக்.1) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதன்கிழமை (அக்.2) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், வியாழக்கிழமை (அக்.3) கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், வெள்ளிக்கிழமை (அக்.4) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய், புதன் (அக்.1, 2) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 60 மி.மீ. மழை பதிவானது. குன்னூா் (நீலகிரி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) - தலா 80, கோத்தகிரி (நீலகிரி), கருப்பாநதி அணை (தென்காசி), கயத்தாா் (தூத்துக்குடி), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 70 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் செவ்வாய்க்கிழமை (அக்.1) மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com