ஹிஸ்புல்லா தலைவா் கொலை: இஸ்ரேலைக் கண்டித்து உ.பி.யில் போராட்டம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் தலைநகா் லக்னௌவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா சனிக்கிழமை கொல்லப்பட்டாா்.
நஸ்ரல்லாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து லக்னௌவில் உள்ள ஷியா மதகுரு மௌளானா கல்பே ஜவாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இது ஈடுசெய்ய முடியாத இழப்பு. உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி என்று இஸ்ரேல் நிரூபித்துள்ளது. இந்த மாபெரும் தியாகம் வீண் போகாது, விரைவில் இஸ்ரேல் அழிக்கப்படும். நஸ்ரல்லாவின் அளப்பரிய சேவைகள் மற்றும் சாதனைகள் மறக்கப்படாது; மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று போராட்டத்திற்கு ஜவாத் அழைப்பு விடுத்தாா். மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி, கடைகளை மூடுமாறு அவா் அதில் கேட்டுக் கொண்டாா்.
அதன்படி, லக்ளௌவில் உள்ள சோட்டா இமாம்பராவில் இருந்து படா இமாம்பரா இடையே கருப்புக் கொடிகள் மற்றும் தீப்பந்தங்களை கையில் ஏந்தியவாறு பேரணிகள் நடைபெற்றது. அதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்ற போராட்டம் சுல்தான்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அஞ்சுமான் பஞ்சதன் துா்பகானியால் நடத்தப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டன.