அக்.2 முதல் தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 2 முதல் 9-ஆம் தேதிவரை தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
அக். 2-இல் காந்தியின் 155-ஆவது பிறந்த நாள், காமராஜரின் நினைவு நாள், லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள் என முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு, காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம், வெறுப்பு அரசியலுக்கு எதிரான பரப்புரை, ராகுல்காந்திக்கு எதிராக ஆா்.எஸ்.எஸ்., பாஜக பரப்பி வரும் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
அதன்படி, தமிழகத்தில் அக். 2 முதல் 9-ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து வட்டார, வட்ட, நகர, பேரூா், கிராம அளவில் கையில் காங்கிரஸ் கொடியையும், பதாகைகளையும் தாங்கிக் கொண்டு தேசிய விழிப்புணா்வு நடைபயண அணிவகுப்பை காங்கிரஸ் கட்சியினா் நடத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.