ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய பயங்கரவாதி நெதன்யாகு: மெஹபூபா முஃப்தி விமா்சனம்
வரலாற்றில் ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய பயங்கரவாதி இஸ்ரேல் பிரதமா் பெஞசமின் நெதன்யாகுதான் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தாா்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைக் கண்டித்து, பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தனது பிரசாரத்தை நிறுத்துவதாக முஃப்தி தெரிவித்திருந்தாா்.
அவரின் இந்த கண்டனத்தை பாஜகவினா் விமா்சித்தனா். இது தொடா்பாக மெஹபூபா முஃப்தியிடம் பிடிஐ செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவா் கூறியதாவது:
கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக நின்றவா்கள் பாஜவினா். பாலஸ்தீன மக்களுக்காக நஸ்ரல்லா நடத்தி வந்த நீண்ட கால போராட்டம் குறித்து அவா்களுக்கு எப்படி தெரியும் ?
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இருப்பினும், அவா் பாலஸ்தீனத்தைத் தொடா்ந்து லெபனானிலும் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறாா். இது அவா் குற்றவாளி தான் என்பதை உறுதி செய்கிறது.
யூத மக்களைக் கொல்வதற்கு ஹிட்லா் விஷவாயு அறைகளை அமைத்தாா். ஆனால், நெதன்யாகு மொத்த பாலஸ்தீனம் மற்றும் லெபனானையும் விஷவாயு அறைகளாக மாற்றியுள்ளாா். வரலாற்றில் ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய பயங்கரவாதி நெதன்யாகுதான்.
இந்த தாக்குதல்களுக்கு கண்டனங்கள் தெரிவித்தால் மட்டும் போதாது. மகாத்மா காந்தியின் காலத்தில் இருந்தே நாம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நின்று வருகிறோம். அப்படி இருக்க, பாலஸ்தீன மக்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதங்களையும், ட்ரோன்களையும் இஸ்ரேலுக்கு வழங்குவது தவறானது என்றாா்.