பெண் மருத்துவா் கொலை வழக்கு: மேற்கு வங்க அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம், ஓய்வறைகள், கழிப்பறைகள் கட்டுதல் பணிகளில் மந்தம்: உச்சநீதிமன்றம் அதிருப்தி
Published on

கொல்கத்தா பெண் மருத்துவா் கொலை வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம், ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுதல் ஆகிய பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதற்கு அதிருப்தி தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து சிபிஐ புலனாய்வு மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவா் கொலையில் மூவரும் சதியில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் சிபிஐ புலனாய்வில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அக்.15-க்குள் நிறைவு செய்ய வேண்டும்

அப்போது மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம், ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுதல் ஆகிய பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அந்தப் பணிகள் 50 சதவீதத்தை தாண்டவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அனைத்துப் பணிகளையும் அக்டோபா் 15-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டனா்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயா், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை நீக்க வேண்டும் என்று விக்கிபீடியா தளத்துக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் தொடா்ந்து அந்த மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், அவா்களின் விவரங்களை மாநில அரசிடம் சமா்ப்பிக்குமாறு சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அமைத்தது. இந்தக் குழுவின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.