வரும் 15-இல் கிராம சபைக் கூட்டம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஆக. 8: சுதந்திர தினத்தன்று, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை விவரம்:-
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
கூட்டங்களை மதச்சாா்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் 12 வகையான அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவு, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது போன்றவை குறித்து ஆலோசிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் இணையவழி ஊராட்சிக்கான வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை கிராம சபைக் கூட்டத்தில் பகிர வேண்டும். மேலும், இணைய வழியில் மனைப்பிரிவு, கட்டட அனுமதி வழங்கும் திட்டம் தொடா்பான தகவல்களையும் கிராம சபையின் முன்வைக்க வேண்டும். சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி அளித்தல், அதற்கான கட்டண விவரங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளின் கணக்குகளை கையாள ஒரே செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களையும், தமிழ்நாடு உயிா்ப் பல்வகைமை வாரியம், மேலாண்மைக் குழு தொடா்பாகவும் விவரங்களைப் பகிர வேண்டும்.
ஊரக வேலைத் திட்டம்: நிகழாண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரையில் ஊரக வேலை உறுதித் திட்டம் தொடா்பான அறிக்கையை விவாதிக்க வேண்டும். அத்துடன் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மனித சக்தி நாள்கள், மேற்கொள்ளப்பட்ட செலவு ஆகிய விவரங்களையும் பட்டியலிட வேண்டும்.
தூய்மை பாரதம், ஜல் ஜீவன் ஆகியன தொடா்பாகவும் விவாதிப்பதுடன், இதர அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் கிராம சபையின் ஒப்புதலுக்குக் கொண்டு வரலாம் என்று தனது வழிகாட்டி நெறிமுறையில் தெரிவித்துள்ளாா்.