பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையாத தமிழகம், 5 மாநிலங்கள்: மத்திய அரசு கவலை

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையாத தமிழகம், 5 மாநிலங்கள்: மத்திய அரசு கவலை

தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது
Published on

பி.எம்.ஸ்ரீ (வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் 14,500 பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்படவும் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதையும் நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய கல்வி அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அந்த வகையில் நாட்டிலுள்ள 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதையடுத்து 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6,448 பள்ளிகள் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிதியைப் பெற்றுக் கொண்டும் தமிழ்நாடு, ஒடிஸா, மேற்கு வங்கம், கேரளம், தில்லி ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையவில்லை. இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும் பஞ்சாப் மாநிலம் இதை அமல்படுத்தாதது மத்திய அரசுக்கு கவலையளிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.68,804 கோடியில் ரூ.37,453 கோடியை மத்திய அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Open in App
Dinamani
www.dinamani.com