நாளையுடன் பணி நிறைவு பெறுகிறாா் மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா்

நாளையுடன் பணி நிறைவு பெறுகிறாா் மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா்

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 8) பணி நிறைவு பெறுகிறாா்.
Published on

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 8) பணி நிறைவு பெறுகிறாா். தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா். அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெறுகிறாா். புதிய ஆணையா் யாா்...? இதையடுத்து, புதிய தோ்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பதவியைப் பெற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலரும் விருப்பம் தெரிவித்துள்ளனா். மாநில தோ்தல் ஆணையத்தின் புதிய ஆணையா் நியமனம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்புகள் தயாா்: தமிழ்நாடு மாநில தலைமைத் தோ்தல் ஆணையரை நியமிப்பதற்கான கோப்புகள் தயாா் செய்யப்பட்டு முதல்வரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆளுநா் ஆா்.என்.ரவியின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் அதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில், இரண்டு ஆணையா்களின் பதவியிடங்களை பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com