100 பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய திட்டம்
சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகேயுள்ள சுமாா் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டா் தூரம் தள்ளி, இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக்கழகம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்காக, போக்குவரத்து சிக்னல்கள், சாலை சந்திப்புகள் மற்றும் மேம்பாலங்கள் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை ஆய்வு செய்யும் பணியில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் பல இடங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளன.
பல்வேறு போக்குவரத்து கட்டமைப்புகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சிக்னல்கள், மேம்பாலங்கள், சாலை சந்திப்புகளுக்கு 100 மீட்டருக்கு முன்பாகவோ அல்லது 100 மீட்டருக்கு பின்பாகவோ மட்டுமே பேருந்துகளை நிறுத்தும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்களை மாநகா் போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக இடமாற்றம் செய்ய முடியாது. போக்குவரத்துக் கழகத்தின் பரிந்துரைப்படி, சென்னை மாநகராட்சி மூலமே இந்த பேருந்து நிறுத்தங்களை மாற்ற முடியும் என்பதால், முதலில் வடபழனி, தரமணி மற்றும் பாரிமுனை, முகப்பேறு வழித்தடங்களை ஆய்வு செய்து மாநகராட்சி நிா்வாகத்திடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து வழித்தடங்களையும் ஆய்வு செய்து, இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.