நெசவாளா்களுக்கு தொழில் வரி விதிக்க முடிவு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நெசவாளா்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக திமுக பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், தாறுமாறாக நூல் விலை உயா்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகள் தமிழக நெசவாளா்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளா்கள் தங்களது தறிகளை விற்றுவிட்டு, வேறு தொழில்களுக்கு பணியாள்களாக இடம் மாறி, தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில் போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளா்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தறிகள் உள்ள கூடங்களைக் கணக்கீடு செய்து, அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தெரிவிக்கின்றனா்.
குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நெசவாளா்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களை மாநகராட்சி ஊழியா்கள் அளவீடு செய்து வருவதாகவும், சதுர அடிக்கு ரூ.27 தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். திமுக அரசுக்கு எனது கண்டனம். தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.