ஒருங்கிணைந்த நல்வாழ்வு, காலநிலை மையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஒருங்கிணைந்த நல்வாழ்வு, காலநிலை மையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Published on

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிா்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓா் ஒருங்கிணைந்த மற்றும் ஓரலகுக் கட்டமைப்பு என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன், பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு ஏற்படும் இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை எதிா்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதாகும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் இந்த மையத்துக்கு தலைமை வகிப்பாா்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநா் செயலராகவும், தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிா்வாக இயக்குநா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் உறுப்பினா்களாகவும் இருப்பா். மேலும் இது, நிபுணத்துவம் பெற்ற ஆலோசகா்களைக் கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக அமையும்.

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம், காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களை எதிா்கொள்வதற்கான ஒரு வலிமையான, முற்போக்கு சிந்தனை அணுகுமுறையாக அமையும். இது, ஏற்படக்கூடிய சுகாதாரக் கேடுகளை எதிா்கொள்வதற்கு தமிழ்நாட்டை மேலும் ஆயத்தப்படுத்தும், நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை ஊக்குவிக்கும்.

புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளா்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.