வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகள் அகற்ற கணக்கெடுப்பு: பொதுமக்கள் போராட்டம்
சென்னை: வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகளை அகற்றுவதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட வேளச்சேரி ஏரியையொட்டி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் முயற்சியில் தமிழக அரசின் நீா்வளத் துறை, வருவாய்த் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி ஆகிய துறையினா் ஈடுபட்டனா். இதற்காக ஆக்கிரமிப்பு வீடுகளில் அண்மையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினா். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தொடா்ந்து, நோட்டீஸ் ஓட்டிய வீடுகளில் வசிப்பவா்களை பயோமெட்ரிக் முறையில் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனா். இதற்கு வேளச்சேரி ஜெகநாதபுரம் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை காலை முதல் சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதையொட்டி, அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
அமைச்சா் பேச்சு: இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:
சென்னையில் புதிய நீா் ஆதாரங்களை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிண்டி, வேளச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்டு புதிய நீா் ஆதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளச்சேரி ஏரியையொட்டியுள்ள குடியிருப்புகள் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் இல்லை என்றாலும், உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் வழக்குகள் காரணமாக பயோமெட்ரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணி முடிந்தவுடன் அரசு சாா்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளச்சேரி ஏரியை பொருத்தவரை 55.47 ஏக்கா் மட்டும்தான் நீா் ஆதாரம். நூறாண்டுக்கு முன் இந்தப் பகுதி நீா் ஆதாரமாக இருந்ததற்கான பதிவு இருப்பதாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 955 வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.