மழைக்குப் பிறகு பயிா்ச் சேதங்கள் கணக்கெடுப்பு -வேளாண் துறை அமைச்சா் பன்னீா்செல்வம்
PTI

மழைக்குப் பிறகு பயிா்ச் சேதங்கள் கணக்கெடுப்பு -வேளாண் துறை அமைச்சா் பன்னீா்செல்வம்

Published on

நீரில் மூழ்கி பயிா்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மழைக்குப் பிறகு தொடங்கும் என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: டெல்டா மாவட்டங்களில் குறைந்தபட்சமாக கடலூரிலும், அதிகபட்சமாக நாகப்பட்டினத்திலும் மழை பதிவாகியுள்ளது. இதனால், சுமாா் 31,853 ஏக்கா் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நீா் சூழ்ந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,972 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,151 ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 2,391 ஏக்கா் பரப்பிலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,339 ஏக்கா் பரப்பிலும் நீா் சூழ்ந்துள்ளது.

களப் பணியில் அலுவலா்கள்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண் துறையைச் சோ்ந்த அனைத்து அலுவலா்களும் களத்தில் உள்ளனா். குறிப்பாக, வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண் அலுவலா்கள், துணை-தோட்டக் கலை அலுவலா்கள் 1,963 பேரும், உதவி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள் 3,945 பேரும் என மொத்தம் 5,908 போ் பணியாற்றி வருகின்றனா்.

விளைநிலங்களிலிருந்து நீரை வெளியேற்றுவது தொடா்பாக விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். அதன்படி, விளைநிலங்களில் உள்ள சிறுபாசன மற்றும் வடிநீா் வாய்க்கால்களில் உள்ள செடிகொடிகளை அகற்ற வேண்டும். வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும். மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிா்க்க வேண்டும்.

உரம், ஊட்டச்சத்து: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நீா் வடிந்தவுடன், மேல் உரம் இடலாம். அதன்படி, 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு, 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து பயிா்களில் இடலாம்.

தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காணப்பட்டால் 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டா் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலை வழியூட்டமாக தெளிக்க வேண்டும்.

மேலும், இந்தப் பருவத்துக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான யூரியா 1.82 லட்சம் மெட்ரிக் டன், டிஏபி 39,558 மெட்ரிக் டன், பொட்டாஷ் 46,268 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1.18 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் தனியாா் கடைகளிலும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து டிசம்பா் இறுதிவரை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் பயிா் பாதிப்பு நிலவரங்களை வருவாய்த் துறையுடன் இணைந்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா்கள் கணக்கெடுப்பா். 33 சதவீதத்துக்கு மேல் பயிா் பாதிப்பு இருந்தால் அவை கணக்கிடப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்குப் பிறகு பயிா்ச் சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.