முகப்பு கிறிஸ்துமஸ்
ரோமிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதா சொரூபம்
By - ஆர். முருகன் | Published On : 24th December 2019 06:36 PM | Last Updated : 23rd December 2020 03:21 PM | அ+அ அ- |

திருச்சி மேலப்புதூரில் அமைந்துள்ளது புனித மரியன்னை பேராலயம். இப்பேராலயம் மிகவும் பழமை வாய்ந்த பேராலயங்களில் ஒன்றாகவும், திருச்சிராப்பள்ளியிலுள்ள மற்ற பேராலயங்களுக்குத் தலைமையிடமாகவும் விளங்குகிறது. 175 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இப்பேராலயம் 2015ஆம் ஆண்டில் புதுப்பொலிவுடன் மீண்டும் வடிவமைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி புனித மரியன்னை பேராலயம் தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பேராலயங்களுக்குத் தலைமையிடமாக இருக்கிறது. இப்பேராலயம் தினமும் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்,
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பிரார்த்தனை காலை 5.00 மணி, 6.30 மணி, 8.30 மணி மற்றும் மாலை 6.00 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். வாரநாட்களில் காலை 6.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் பிரார்த்தனை நடைபெறும்.
ரோமிலிருந்து கொண்டு வரப்பட்ட மேரி மாதா சொரூபம், திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சமயங்களிலும் தாங்கள் வழிபடும் தெய்வங்களைக் குழந்தையாகப் பாவித்து வணங்கும் வழக்கம் உள்ளது. அதேபோல் கிறிஸ்துவ சமயத்தில் ஏசுவின் அன்னையான மேரி மாதாவை குழந்தையாகப் பாவித்து வணங்குகின்றனர்.
குழந்தை மாதாவை லத்தின் மொழியில் மரியா பாம்பினா என்று அழைப்பர். குழந்தை மாதாவை வழிபடும் இந்த பக்தி முயற்சியை இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள பிறரன்பு சகோதரிகள் தோற்றுவித்தனர். இதன்படி தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாவட்டம் காங்கேயத்தில் குழந்தை மாதாவுக்குத் திருத்தலம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து தமிழகத்திலேயே குழந்தை மாதா சொரூபத்தைப் பெற்று அதன் வழியாக அன்னையாள் மகிமையைப் பரப்பும் பேராலயமாக திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம் விளங்குகிறது.