கரூர் புனித தெரசாள் ஆலயம்

கத்தோலிக்க திருச்சபையின் இன்றைய கோவை மறைமாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும்,
கரூர் புனித தெரசாள் ஆலயம்

கத்தோலிக்க திருச்சபையின் இன்றைய கோவை மறைமாவட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்ததும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆலயமாக கரூர் புனித தெரசாள் ஆலயம் விளங்குகிறது. 1643 கரூரிலும், ஈரோட்டிலும் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்துள்ளனர். 

அப்போது பால்தசார் தக்கோஸ்தா என்ற இயேசு சபையின் சாமியார் 1643-ல் திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் வந்து  ஆன்மிக பணிகளை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து இவரிடம் கரூர் கிறிஸ்தவர்கள் 1644-ம் ஆண்டில் பாவசங்கீர்த்தனம் செய்து, நன்மை வாங்கிச் (சூபிலிப்பலன்) பலனடைந்துள்ளனர். இதன் பின்னர் சாமியார் பால்தசர்தக்கோஸ்தா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்று அங்கு ஆலயத்தை நிறுவி தனது இறைப்பணிகளைச் செய்துவந்துள்ளார். 

இதையடுத்து 1890-ல் வெளியிடங்களிலிருந்து 76 கிறிஸ்தவர்கள் கரூர் வந்துள்ளனர். 1927-ல் கரூர் பங்கிற்கு பங்குத்தந்தையாக வந்த சி.சா.மரியாரோக்கிய நாதர் கரூர் நகர் பகுதியில் ஆலயம் கட்ட வேண்டும் எனத் தனது பங்குமக்களிடம் கூறியுள்ளார். அப்போது அவருக்கு சாமிநாத முதலியார் உதவிக்கரமாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் யார் பெயரில் கோயிலைக் கட்டுவது என்ற வினா எழுந்தபோது அண்மையில் புனிதர் பட்டம் பெற்ற குழந்தை தெரசம்மாள் பெயரைச் சூட்டுவது என முடிவெடுத்தனர். ஏனெனில் அவர் சாகும்தருவாயில் நான் மோட்சத்துக்குப் போனதும் இவ்வுலகத்தின் மேல் ரோசா பூ மாரி பொழிவேன் எனக் கூறியதால், அவர் பெயரில் ஆலயம் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டு, அப்போதைய கோவை மண்டல ஆயராய் இருந்த அகுஸ்தீன்ருவா ஆண்டவரிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றனர். 

அப்போது கோயில் கட்டுவதற்கு ரூ.2,000 மானியமாய் கொடுப்போம். மீதம் உள்ள பணத்தை ஊர் மக்களிடம் வசூலித்துக்கொள்ள வேண்டும் என ஆயர் கூறியதையடுத்து அன்றைய ஆண்டிலே ரூ.2,000 மற்றும் ஊரார் ஒத்துழைப்போடு ஆலய கட்டுமான பணிகள் துவங்கியது. செங்கல், சுணணாம்பு காரை, கருப்பட்டியால் 1930-ல் கட்டி முடிக்கப்பட்டது. 

பின்னர் ஆலயத்திற்குள் தேக்குமரத்தால் ஆன புனித தெரசம்மாள் சுரூபம் திருச்சியைச் சேர்ந்த ராயர்பிள்ளை என்பவரால் வைக்கப்பட்டது. கோயிலில் பூசைக்கு வேண்டிய சணல் நூல் துணிகள், பட்டு ஆயத்தங்கள் அனைத்தும் தீன்ருவா ஆண்டவர் சிபாரிசின் பேரில் பிரான்சு நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. 

சாமிநாத முதலியார், இன்னாசிமுத்து முதலியார் ஆகியோர் செய்த பொருளுதவியும், விடாமுயற்சியும்தான் இந்த ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இன்றும் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தருபவராகவும், நோய்களைத் தீர்க்கும் தாயாக இருந்து வருகிறார் புனித தெரசாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com