தூய இதய ஆண்டவர் பசிலிக்கா!

தமிழகத்தின் 7 முக்கியப் பேராலயங்களில் வேளாங்கண்ணிக்கு நிகராகப் போற்றப்பெரும் பேராலயம் புதுச்சேரி தூய இதய ஆண்டவர் பசிலிக்காவாகும்.
தூய இதய ஆண்டவர் பசிலிக்கா!


தமிழகத்தின் 7 முக்கியப் பேராலயங்களில் வேளாங்கண்ணிக்கு நிகராகப் போற்றப்பெரும் பேராலயம் புதுச்சேரி தூய இதய ஆண்டவர் பசிலிக்காவாகும். பசிலிக்கா என்றால் பேராலயம் என்ற பொருள் பெரும். 117 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலயம் கடலூர் - புதுச்சேரி மறை மாவட்டத்தில் உள்ள ஒரே பசிலிக்காவாக திகழ்கிறது.

ஆலயத்தின் வரலாறு: 

இந்தியாவில் பிரெஞ்சு கலாசாரப் பின்னணியாகத் திகழும் புகழ்மிகு புதுச்சேரிக்கு எழில் கூட்டும் வகையில் அமைந்துள்ளதுதான் தூய இதய ஆண்டவர் பசிலிக்கா. புதுச்சேரி நகரின் தெற்குப் பகுதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது இந்த தேவாலயம். இது கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமின்றி ஜாதி, மத பேதமின்றி யாவருக்கும் அருளும், அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் தரும் ஆலயமாகத் திகழ்ந்து வருகிறது.

ஆலயம் உருவாகக் காரணம்:

பிரெஞ்சு நாட்டு பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள "மோன் மார்த்ர்' என்ற ஏசுவின் தூய இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட திருத்தலத்தை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏசுவின் திரு இதய பக்தி வளர்ச்சி பெற்றது. இந்தியாவிலும் இந்தப் பக்தி வளர 1876 ஆம் ஆண்டு மைசூர் மறை மாநிலம் தூய இதய ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுவை மறை மாவட்ட பேராயர் காந்தி ஆண்டகையும், தூய இதய ஆண்டவரின் பக்தியால் உந்தப்பட்டு, 1894 மார்ச் மாதத்தில் ஊட்டியில் புதுவை மறை மாவட்டத்தை இதய ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தார்.

1895 ஜூன் 25 ஆம் தேதி புதுச்சேரியில் புதுவை உயர்மறை மாநிலத்தை அருள்பொழிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, தூய இதய ஆண்டவர் பெயரால் பல புதிய ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. பேராயர் காந்தி ஆண்டகை, தூய இதய ஆண்டவரின் மீதான பக்தி காரணமாகவும், ஏசுவின் தூய இதயத்துக்கென தனியொரு ஆலயம் புதுச்சேரியில் எழுப்பப்பட வேண்டும். அது பாரிஸ் நகர் "மோன் மார்தர்'க்கு ஈடாக விளங்க வேண்டும் என எண்ணினார். அவரது எண்ணப்படி, அக்கால கட்டடக்கலை சிற்பி டெலஸ்ஃபோர் வெல்டர் அடிகளாரின் திட்டப்படி, அன்றைய பேராலயப் பங்கு தந்தை அருள்திரு ஃபோர்கேவின் பெரும் உடலுழைப்பால் 1902 ஆம் ஆண்டில் தூய இதய ஆண்டவர் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டத் தொடங்கப்பட்டது.

ஆலய அமைப்பு:

தூய இதய ஆண்டவர் ஆலயம் லத்தீன் சிலுவை வடிவமைப்பும், கொத்தீக் கலைத்திறனும் கொண்டது. 50 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும், 18 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ஆலயத்தை 24 மிகப்பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன.

ஆலயத்தின் வாயிலை நெருங்கும் போது, நம்முன் கல்லின் மேல் ஆங்கிலத்தில், "இக்கோயிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதை புனிதமாக்கினேன். என் கண்களும், என் இதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்" என எழுதப்பட்டுள்ளது.

ஆலயத்துக்குள் நுழைய நாம் கதவைத் திறக்கும் முன், அங்கு முட்கள் செதுக்கப்பட்ட ஏசுவின் இதயமும், லீலி மலர் மற்றும் முட்கள் செதுக்கப்பட்ட ஏசுவின் தாய் மரியாவின் இதயமும் என இரு இதயங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் ஏசுவின் இதயத்தை மையமாக வைத்து, அவரைச் சுற்றிலும் புனிதர்களின் 14 முழு உருவப் படங்களும், 14 மார்பளவு படங்களும் பதிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் நடுபீடம் முழுமையும் தேக்கு மரத்தாலான சித்திர வேலைபாடுகளை கொண்டதாக உள்ளது. இதே போல, இரண்டு இறக்கைகளிலும் தலா 3 பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலய வளர்ச்சி:

அருள்திரு ஆரோக்கியநாதரின் மேற்பார்வையில் 1902 முதல் 1907 வரை கட்டப்பட்டது. அப்போது கட்டுமானப் பணிகளின் பொறுப்பாளராக அன்றைய பங்குதந்தை ஃபோர்கே பணியாற்றினார். 1907 டிசம்பர் 17 ஆம் நாள் பேராயர் காந்தி ஆண்டகை ஆலயத்தின் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதனிடையே கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. 1908 ஜனவரி 27 ஆம் நாள் 2300 கிறிஸ்தவர்களை உள்ளடக்கியதாக இந்த ஆலயத்தின் பங்கு உருவாக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகள் நிறைவடையும் முன், சில தடைகள் ஏற்பட்டு, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் சில மாதங்களில் தொடங்கப்பட்டது. பங்கு மக்களால் பேராயரின் ஆயர்த்துவ வெள்ளி விழாவின் நினைவாக 1908 இல் ஆலய மணி வழங்கப்பட்டு, உயர்த்தப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் கட்டடப் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, 1918 இல் பங்கிலுள்ள ஏழை மக்களுக்கு உதவிட தூய ஞானப்பிரகாசியர் சபைக்கன்னியர் இங்கு வந்தனர். ஏழை சிறுவர்களுக்கு ஆதரவும், கல்வியும் அளிக்க ஆலயத்தை ஒட்டி இதய ஆண்டவர் மடமும், உப்பளம் தூய சவேரியர் ஆலயத்தையொட்டி மத்தியாஸ் மடமும் அமைக்கப்பட்டது.

1946 இல் தூய லூர்து அன்னை கேபி மற்றும் பங்கு மன்றமும், 1963 முதல் 1972 வரை பங்குதந்தையாக இருந்த பி. இருதயம் அடிகளாரால் ஆலய சீரமைப்பும், அதைத் தொடர்ந்து பல்வேறு சீரமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. 2005 முதல் 2008 வரை ஏ. தாமஸ் அடிகளாரால் தூய இதய ஆண்டவரின் கேபியும், 4 நற்செய்தியாளர்களின் தூண்களும், தூய இதய ஆண்டவர் குடிலும், 12 திருத்தூதர்களின் படமும், நூற்றாண்டு நினைவுக் கலையரங்கமும் அமைக்கப்பட்டு, அன்பொளி தொலைக்காட்சி சேவையும் தொடங்கப்பட்டது. 2008-09 இல் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் மத்திய அரசு ஆலயத்தின் 2 சிறப்பு தபால் உரைகளையும், தபால் தலையையும் வெளியிட்டது.

பசிலிக்காவாக தரம் உயர்வு: 

ஆலயத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த அன்றைய இந்திய ஆயர் பேரவையின் தலைவர் டெலஸ்போர் கர்தினால் டோப்போ ஆண்டகையிடம், ஆலயத்தைப் பசிலிக்காவாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப் பேராயர் ஆனந்தராயர் பரிந்துரைக்க, இந்திய ஆயர் பெருமன்றம் ஒப்புதல் அளிக்க, வாடிகன் நகர திருவழிபாடு மற்றும் அருளடையாளர்களின் ஆணையம் 24/06/2011 அன்று பசிலிக்காவாக உயர்த்தி ஆணையிட்டது. இந்த ஆவணம் 5/08/2011 இல் பேராயரால் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

2011 செப்டம்பர் 2 ஆம் தேதி திருத்தந்தையின் இந்தியld தூதர் சால்வாத்தோரே பெனாக்கியோ ஆண்டகை இதனை முறைப்படி அறிவித்தார். அடுத்த நாள் அப்போதைய மத்திய அமைச்சர் வே. நாராயணசாமி தலைமையில் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அப்போதைய துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் தலைமையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்பட்டது.

புதுவையின் மிகப் பழமையானதும், பாரம்பரியமிக்கதுமாக தூய இதய ஆண்டவர் பசிலிக்கா விளங்கி வருகிறது.

படங்கள்: K. ரமேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com