திருச்சியின் அடையாளமாகத் திகழும் புனித லூர்து அன்னை ஆலயம்!

திருச்சி மாநகரின் இதயப் பகுதியான மெயின்கார்டு கேட் அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம்.
திருச்சியின் அடையாளமாகத் திகழும் புனித லூர்து அன்னை ஆலயம்!

திருச்சி மாநகரின் இதயப் பகுதியான மெயின்கார்டு கேட் அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம். இந்த ஆலயமும் இதன் வரலாறும், தூய வளனார் கல்லூரியின் வரலாற்றுடன் இணைந்தவை. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பக்குளமும் அமைந்துள்ளன. தெப்பக்குளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் இருக்கும் இடத்திலிருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம்.

லூர்து அன்னை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமி தனது சகோதரி மற்றும் தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மசபியேல் என்ற கெபி (குகை) அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது பெர்னதெத்திற்கு மட்டுமே தெரிந்தது. அவளோடு சென்ற மற்ற இருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச் சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகிறாள். அந்த இடத்தில் ஓர் நீரூற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர்.

முடிவில் அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது உண்மையே என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராகக் கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள் 1858  ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந் தேதி ஆகும்.

ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்சு நாட்டைச்  சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினர். 

தேவாலயத்தின் வரலாறு

இப்போது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியிலிருந்த பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக இருந்திருக்கிறது. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர் 1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் தேவாலயம் கட்டுவதற்குத் திட்டம் போடப்பட்டுப்  பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தனம் சவரி முத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.  1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898-ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுர வேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைப்பட்டு, பின்னர் 1903 ஜனவரி தொடங்கி 1910  டிசம்பரில் முடிந்தது.

தேவாலயத்தின் அமைப்பு

கோதிக் கட்டடக்கலை அமைப்பில் உருவானது இந்த தேவாலயம். (கோதிக் கட்டடக்கலை என்பது 12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் உருவானது.  பெரும்பாலும் தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள் இந்த அமைப்பு முறையினால் கட்டப்பட்டன.) இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள், ஆலயத்தைக் கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார்.  தேவாலயம் கட்டுவதற்குத் தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்தன்னை தேவாலயமும் கட்டப்பட்டது என்பது சிறப்புச் செய்தியாகும்.

தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே நம்மை அந்த பிரமாண்டமான வாயில் சிலுசிலுவென்று வீசும் காற்றோடு வரவேற்கும். கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மேல் நாட்டவர்கள் இந்த ஆலயத்தின் அழகினை ரசித்து ரசித்து படம் எடுப்பதைக் காணலாம். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 –1998)  நடந்தபோது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. 

வழிபாட்டு நேரம்: வார நாட்கள்- காலை: 5.30, 6.30, மாலை: 6.30

ஞாயிறு - காலை: 5.15, 6.15, 7.30, மாலை: 6.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com