தேவ குமாரனின் திருவிழா!

மனித உருவெடுத்து நம்மில் ஒருவராக வாழ வந்த இறைவனின் தொடர் பிரசன்னம் உடனிருப்பு தான் கிறிஸ்துமஸ் விழா தரும் இனிய செய்தி.
தேவ குமாரனின் திருவிழா
தேவ குமாரனின் திருவிழா

கிறிஸ்து பிறப்பு விழா அனைவருக்கும் நம்பிக்கையையும்  ஆறுதலையும் தரும் ஒரு நற்செய்திப் பெருவிழா. இதில் இயேசு, இம்மானுவேல் என்று அழைக்கப்படுகிறார் என்று பொருள். மனித உருவெடுத்து நம்மில் ஒருவராக வாழ வந்த இறைவனின் தொடர் பிரசன்னம் உடனிருப்புதான் இவ்விழா தரும் இனிய செய்தி.

மாறி வரும் இவ்வுலகில் மாறாத நட்புடன், பரிவுள்ள தந்தையாக, பாசமுள்ள தந்தையாக, அன்னையாக நீங்கா உறவுடன் என்றும் நம்மை வழி நடத்தி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

அந்தியோகஸ் எபிபானாஸ் என்ற கிரேக்க அரசன் யூதர்களைத் துன்பப்படுத்தினான். தேவாலயத்தைத் தீட்டுப் படுத்தினான். இதனை அப்போது ஆசாரியனாக இருந்தவர், யூதாஸ் மெக்காபியஸை எதிர்த்து, கிரேக்க அரசனுடன் போரிட்டுத் தேவாலயத்தை அவனது ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துச் சுத்திகரித்து, மறு பிரதிஷ்டை செய்தார். அந்த நாள்தான் யூதர்களுக்கு பண்டிகை நாளாக அறிவிக்கப்பட்டது. அதுதான் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியான அந்த ஒரு நாளை அவர்கள் ஒளியின் பண்டிகை என அழைத்தனர்.

அந்த நாள்களில் ரோம ராஜ்ஜியப் பிரஜைகள் டிசம்பர் மாதம் 25 ஆம் நாளை சூரிய தேவனின் நாளாகக் கொண்டாடி வந்தனர். கி.பி. 326-ல் கான்ஸ்டன்டைன் என்ற கிறிஸ்துவ ரோமானியச் சக்கரவர்த்தி சூரிய தேவனின் பண்டிகையை தேவ குமாரனின் பண்டிகையாக மாற்றி அறிவித்தான். இதனை அந்தக் கால கிறிஸ்துவர்கள் மிகவும் வரவேற்று அனுஷ்டித்தனர்.

சாமானியர்கள் கொண்டாடிய இந்த தேவ குமாரன் திருவிழாவை கிழக்கிந்திய நாடுகளில் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஜனவரி 6 ஆம் தேதி கொண்டாடி வந்தனர். இன்னும் சிலர் ஜனவரி மாதம் 17 ஆம் தேதியில் இதனை நினைவு கூர்ந்தனர். ஆனால், உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் நாள் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதிதான் என்பது முடிவாக உள்ளது.

மெழுகுவர்த்தியின் முக்கியத்துவம்

வெளிச்சம் தர மனிதன் கண்டுபிடித்த விளக்குகளில் மிகப் பழமையானது மெழுகுவர்த்தி. கி.பி. 400 மத்தியில் இது அறிமுகமானது. எகிப்தியரும், கிரேக்கர்களும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில், மெழுகுவர்த்தியை ஏற்றி வழிபடும் வழக்கம் 1839 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரிலுள்ள ஆதரவற்றோர் விடுதியில் இளம் கிறிஸ்துவ துறவி ஜோனான் ஹென்ரிச் விச்சர்ன் என்பவரால்தான் இப்பழக்கம் முதன்முதலாகத் தொடங்கியது.

வெள்ளை கிறிஸ்துமஸ்

20 ஆம் றூற்றாண்டில் எட்டு முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டன் மாநகர் பனியால் மூடப்பட்டிருந்தது. இதைத்தான் வெள்ளை கிறிஸ்துமஸ் என்று அழைப்பதுண்டு.

மிகப் பழமையான சர்ச்

இந்தியாவில் கேரள மாநிலத்தில் பழவூர் கிராமத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச் தான் மிகவும் பழமையானதாகும். இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 ஆம் ஆண்டு இந்த சர்ச்சைக் கட்டியதாகக் கருதப்படுகிறது.

நட்சத்திரத் தொப்பி

நம் நாட்டில் கிறிஸ்துவர்களின் வீடுகளில் இயேசுவின் வருகையைக் குறிக்கும் வகையில் வானத்து நட்சத்திரங்களை அலங்கரித்துத் தொங்க விட்டிருப்பார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அனைவரும் தங்களது வீடுகளில் நட்சத்திரங்களை அலங்கரித்துத் தொங்க விடுகிறார்கள். சுவீடன் நாட்டிலோ இவ்வாறு செய்வதில்லை. அதற்குப் பதிலாக அந்த நாட்டுக் குழந்தைகள் தங்கள் தொப்பிகளில் வெள்ளியால் செய்யப்பட்ட நட்சத்திரங்களை ஒட்டிக் கொண்டு செல்வார்கள். இது வெயிலில் பளபளவென மின்னும்.

கிறிஸ்துமஸ் பாட்டி

உலக நாடுகள் எல்லாவற்றிலும் சான்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால், சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பாட்டி என்று அழைக்கப்படுகிறார். தாத்தாவை விடப் பாட்டியிடம் அன்பும், உரிமையும் அதிகம் என்பதில் இங்குள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் கூடுதலாகக் கிடைக்கும்.

தங்கப் பூ சர்ச்

ரஷியாவில் லெனின் கிராட் நகரில் உள்ள செயின்ட் ஐசக் சர்ச்சில் அலங்காரப் பொருள்களில் உள்ள பூ வேலைப்பாடுகள் எல்லாம் தங்கத்தால் ஆனவை. இந்தத் தங்கம் சுமார் ஒரு டன் எடைக் கொண்டவையாகும்.

சிலுவை வந்த விதம்

கிறிஸ்துவர்களின் கடவுள் கிரைஸ். இந்த கிரேக்கச் சொல்லுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது கடவுளின் குமாரர் என்று பொருள். இந்த கிரைஸ்தான் தமிழில் கிறிஸ்து என மருவியது. சிலுவையை ஆங்கிலத்தில் கிராஸ் என அழைப்பதுண்டு. லத்தீன் மொழியில் குருக்ஸ் என்பர். தமிழில் முதலில் குருசு என்றனர். சிரியா மொழியில் சிலிபேர் என்றனர். இதையே தமிழுக்கு மதப் பிரசாரம் செய்ய வந்த சீகன்பால்கு என்ற பாதிரியார் சிலுவை என்று தமிழில் மொழி பெயர்த்தார். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து மரண தண்டனை வழங்கப்பட்டதால், அது புனித சின்னமாகக் கருதப்பட்டது. கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பிறகு, அது தடை செய்யப்பட்டுள்ளது.

பைபிள்

கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபிளில் 35 லட்சத்து 66 ஆயிரத்து 480 எழுத்துக்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 746 வார்த்தைகளும் உள்ளது. பைபிளில் ஆயிரத்து 189 பிரிவுகளும், 31 ஆயிரத்து 102 வசனங்களும் இருக்கின்றன.

புனித பூமி பெத்லகேம்

இயேசு பிறந்த புண்ணிய பூமி பெத்லகேம். நாசரேத் ஊரிலிருந்து பெத்லகேம் 130 கிலோ மீட்டர் தெற்கில், இரண்டாயிரத்து 350 அடி உயர மலைச்சரிவில் அமைந்துள்ளது. பெத்லகேமில் பிறப்பு கோயில் என்ற ஆலயம் கி.பி. 333 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டைன் பேரரசனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் நுழைவு வாயில் நாலரை அடி உயரமே கொண்டது. கோயிலில் பெரிய பீடத்திலிருந்து இருபுறங்களிலும் 15 படிக்கட்டுகள் கீழே பூமிக்குள் செல்கின்றன. அதில் இறங்கிச் சென்றால் இயேசு பிறந்த இடம் உள்ளது. (இந்த இடத்திற்கு கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது போய் பார்த்து வர வேண்டும்). இதைப் பிறப்புக் குகை என்று அழைக்கிறார்கள். 12.3 மீட்டர் நீளமும், 3.15 மீட்டர் அகலமும் கொண்ட இக்குகையின் அடித்தளம் வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆனது. அதன் மேல் 14 முனைகள் கொண்ட பொன்னிற நட்சத்திரத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 15 எரியும் விளக்குகள் தொங்குவதையும் பார்த்து வரலாம்.

போக்குவரத்து விதியை மீறினால் தண்டனை கிடையாது

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களைச் செலுத்துவது வழக்கம். அன்று அவர்கள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் பல விபத்துகளும் ஏற்படுவதுண்டு. போக்குவரத்து விதிகளை மீறும் மக்களைக் காவல்துறையினர் பிடிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தண்டனை எதுவும் கொடுக்காமல், அதற்குப் பதிலாக விதிகளை மீறிய கார் மற்றும் வாகனங்கள் மீது கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள். 

கிறிஸ்துமஸ் குடில் வைக்க வேண்டுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பிரிக்க முடியாத முக்கிய அம்சம் குடில். கிறிஸ்துவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, கட்டாயமாக வீட்டில் தங்களின் வசதிக்கேற்ப குடில் அமைப்பார்கள். அன்பு மற்றும் சமாதானத்தைத் தெரிவிக்கவும், அகங்காரத்தை வேரறுக்கவும் குழந்தை இயேசு இந்த உலகில் அவதரித்தார். இதனால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வசதியானவராக இருந்தாலும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களை ஒதுக்கவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது. காரணம், கிறிஸ்துவர்கள் வணங்கும் கடவுளான இயேசு எளிய மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். இதை யாரும் மறந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பே வீடுகளிலும், தேவாலயங்களிலும் இந்தக் குடில் போடப்படுகிறது. குடிலை குறிப்பிட்ட அளவில்தான், குறிப்பிட்ட பொருள்களில்தான் அமைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் ரசனையை பொறுத்து எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். களிமண், மூங்கில், வைக்கோல், மரம், செடி, கொடிகள், தென்னங்கீற்று என எதிலும் அமைக்கலாம். ஆனால், குடிலில் வைக்கோல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குடிலுக்குள் அன்னை மேரி மாதா, குழந்தை இயேசுவின் வளர்ப்புத் தந்தை செயின்ட் ஜோசப், இவர்கள் அரவணைப்பில் குழந்தை இயேசு, இடையர்கள், தேவதூதர்கள் ஆகிய சிலைகள் வைக்கப்பட வேண்டும். குடிலை சுற்றி ஸ்டார், மணி, கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றை வைப்பது கூடுதல் அழகைத் தரும். ரெடிமேட் குடில்களும் உண்டு. இவை அனைத்துக் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கும்.

இயேசுவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே கொண்டாட்டமான திருநாள்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com