கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் 'கேரல்ஸ்'

பிற மதத்தவரும் மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்துவர்கள் வீதிகளில் நடந்து சென்று கேரல்ஸ் பாடியவாறு கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை பிறருக்கும் தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் 'கேரல்ஸ்'

கிறிஸ்துமஸ் பண்டிகை என்ற உடனேயே நமது கண்முன் வருபவை இயேசு பிறப்பை சித்தரிக்கும் குடில், கிறிஸ்துமஸ் மரம், எங்கு பார்த்தாலும் தொங்கவிடப்பட்டிருக்கும் வண்ண வண்ண நட்சத்திரங்கள், சுவையான கேக், ஆடிப்பாடி பரிசு கொண்டுவரும் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ‘கேரல்ஸ்’ எனப்படும் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் ஆகும்.

கிறிஸ்துமஸ் மரம், குடில், நட்சத்திரம் போன்றவை ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கிறிஸ்துமஸ் பாடல் பாடும் ‘கேரல்ஸ்’ மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் ஆலயம், வீடுகள், வீதிகள் என எல்லா இடத்திற்கும் சென்று இவ்விழாவின் மகிழ்ச்சியை எல்லோர் உள்ளத்திலும் விதைக்கின்றனர்.

‘கேரல்ஸ்’ என்ற வார்த்தை கரோல் என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. வட்ட வடிவமாக நின்று பாடிக்கொண்டே ஆடுதல் என்பது இதன் பொருளாகும். பண்டைய காலத்தில் ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கேற்ற பாடல்களை பாடுவது வழக்கமாயிருந்தது. அதில் குளிர்காலத்தில் பாடப்படும் பாடல்கள் நிலைத்து நின்று அதுவே கிறிஸ்து பிறப்பு பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தது. கேரல்ஸ் பாடும் வழக்கம் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது எனக் கூறுபவர் உள்ளனர். 

ஆனால் 4 ஆம் நூற்றாண்டிலிருந்து பாடப்பட்டு வருவதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. பெரும்பாலும் லத்தீன் மொழியில் பாடப்பட்டதால் மக்கள் மத்தியில் சென்று சேராமலும், படிப்படியாக பாடும் வழக்கமும் குறைந்து வந்தது. 

இந்நிலையில் இத்தாலி நாட்டில் கி.பி. 1223 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியார் முதன் முறையாக கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் குடிலை மனிதர்களையும், விலங்குகளையும் கொண்டு உருவாக்கினார்.

அதோடு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் மக்கள் பேசும் ஒவ்வொறு மொழிகளிலும் பாடும் வழக்கமும் ஏற்றப்பட்டது. அப்போது முதல் ‘கேரல்ஸ்’ புத்துயிர் பெற்று எல்லா இடங்களிலும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முறையாக உருபெற்றது.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கிறிஸ்துவ மறுமலர்ச்சி இயக்கங்கள் கிறிஸ்து பிறப்பு காலத்தில் எல்லா இடத்திலும் ‘கேரல்ஸ்’ பாடும் வழக்கத்தை பிரபலமாக்கியது என்றால் மிகையாகாது.

காலஓட்டத்தில் “ Silent night’,  ‘Jingle bells", We wish you a Merry Christmas "  போன்ற பாடல்கள் கிறிஸ்து பிறப்பு காலத்தின் அதுவும் ‘கேரல்ஸ்’ பாடல்களின் அடையாளமாகவே மாறிவிட்டன என்று சொல்லலாம். தமிழில் “அமைதியும் புனிதமும் கமழும் இரவிது”, “கன்னி ஈன்ற செல்வமே” போன்ற பாடல்கள் ‘கேரல்ஸ்’ நிகழ்வுகளில் பாடப்படுகின்றன.

தற்போதைய கால கட்டத்தில் "ரோமன் கத்தோலிக்கர்கள்", "பெந்தகோஸ்தே " உள்ளிட்ட இன்ன பிற பிரிவினரும் கிறிஸ்துமஸ் நாளுக்கு 1 வாரம் முன்பு (25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்றால் 18 ஆம் தேதி) முதல் வீடுகள் தோறும் கேரல்ஸ் செல்ல துவங்குகின்றனர். குறிப்பாக அந்தந்த பகுதி ஆலய பங்கு மக்கள் இல்லங்களுக்கு செல்லும் இந்த கேரல்ஸ் ஆனது பிற மதத்தவரும் இதனை கண்டு மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் நடந்து சென்று வீதிகளில் பாடியவாறு கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை பிறருக்கும் தெரிவிக்கின்றனர். ஆலய பங்கு மக்கள், இளையோர், பாடல் குழுவினர், இசைக்கலைஞர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா என ஒரு சிறு கூட்டமாக ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சென்று மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியும், வேத வாக்கியங்களை வாசித்து இறை ஆசீர் வழங்கியும் வருகின்றனர். 

மேலும் ஆசீர்வாதமான வாழ்த்து அட்டைகளும், கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகளும் வழங்கிச் செல்லும் போது, மக்கள் மனதிலும், சிறு குழந்தைகள் மனதிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் துவங்கி விடுகின்றது. இந்த கேரல்ஸ் செல்லும் போது வீடுகளில் வழங்கப்படும் காணிக்கைகள் சேகரிக்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள், புத்தாடைகள், இனிப்புகள் வழங்க பயன்படுத்தப்படுகின்றன. இதுவே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, பாடல் பாடி மகிழும் கேரல்ஸ்.

கேரல்ஸ் குறித்து  ஜெகன் மாதா பள்ளி தாளாளர் அருள்தந்தை சகாயராஜ் கூறும்போது, நம்மை மீட்க கடவுள் மனிதராக பிறந்த இந்த மாபெரும் நிகழ்வு தரும் மகிழ்ச்சியை எல்லோருடனும், பகிர்ந்து கொள்ள உதவும் ‘கேரல்ஸ்’ பாடல்களை பாடி மகிழ்வோம். இயேசுபிரான் கொணர்ந்த அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நமது உள்ளங்களிலும், இல்லத்திலும், உலகத்திலும் நிலைத்திருக்க நம்மால் இயன்றதைச் செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com