அனைத்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஈரோடு அமல அன்னை!

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் வழிபடும் பொது வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது ஈரோடு புனித அமல அன்னை ஆலயம்.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயம்
ஈரோடு புனித அமல அன்னை ஆலயம்

சாதி, மத வேறுபாடுகளை எல்லாம் கடந்து அனைத்து மக்களும் வழிபடும் பொது வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது ஈரோடு புனித அமல அன்னை ஆலயம்.

இறைவனின் தாய் அன்னை மரியாள் என்பது கிறிஸ்துவர்களின் விசுவாசம். உலகத்தைக் காக்கும் பரம்பொருளான கடவுள் மனித உரு எடுத்து இயேசு கிறிஸ்துவாக பிறந்தார். கடவுள் மனித உரு எடுக்கும் முன்பு தனது தாயை அவர் தேர்ந்தெடுத்தார். இயேசு கிறிஸ்து இம்மானுவேல் என்ற கன்னியின் வயிற்றில் பிறப்பார் என்று இயேசு பிறப்பதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே எசாயா என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களுக்கு அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில்தான் கன்னி மரியாள் கருவில் தூய ஆவியானவராக இறங்கிய கடவுள் மனித உரு எடுத்தார். அப்படித் தனது தாயாக கடவுள் தேர்ந்து எடுத்த அன்னை மரியாள் பற்றிப் பார்த்தால், அவர் ஜென்ம பாவம் இல்லாதவராக பிறப்பு எடுத்தவர் என்பதுதான் திருச்சபையின் நம்பிக்கை.

அன்னை மரியாளின் பெற்றோர் சுவக்கின் - அன்னம்மாள். இவர்களுக்கு இறை அருளால் பிறந்தவர் அன்னை மரியாள். இறை இல்லத்தில் பணி செய்து வந்தார். அந்த ஊரை சேர்ந்த நீதிமானாக விளங்கிய ஜோசப் (சூசையப்பர்) என்பவருக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டவர். திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில்தான், வான தூதர் கபிரியேல், மரியாள் முன்பு தோன்றினார். பரிசுத்த ஆவியின் அருளால் மகனைப் பெற்று எடுப்பீர், அந்தக் குழந்தைக்கு ஏசு என்று பெயர் சூட்டுவீர் என்று கபிரியேல் தூதர் அறிவித்தார். ஆண்டவரின் கட்டளையை அப்படியே ஏற்று அடிபணிந்தார் அன்னை மரியாள்.

கபிரியேல் தூதர் ஆண்டவரின் திருமுன்னிலையில் நிற்கவும், அவரது கட்டளைகளை நிறைவேற்றவும் அதிகாரம் பெற்ற 7 வானதூதர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் கருணையால் ஜென்ம பாவம் இல்லாமல் பிறந்த அன்னை மரியாள், இயேசுவின் பிறப்பு முதல் அவரது சிலுவைப்பாடு மரணம் வரை அவருடன் இருந்தார். ஆண்டவரிடம் வேண்டுபவர்களுக்குச் சிறந்த தாயாகவும் தேவனைப் பரிந்து பேசுபவராகவும் உள்ளார்.

அன்னை மரியாள் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் காட்சி கொடுத்துள்ளார். அப்படி அவரே தோன்றி அறிவித்த வார்த்தைதான் நானே அமல உற்பவம் என்பது. அமல உற்பவம் என்பது ஜென்ப பாவமின்றிப் பிறந்தவர் என்பதாகும்.

கடவுளின் கட்டளையை மீறிய ஆதாம் - ஏவாளின் செயலால், உலகில் பிறப்பவர்கள் அனைவருக்கும் ஜென்ம பாவம் இருக்கும் என்பது நம்பிக்கை. அத்தகைய பாவம் இன்றிப் பிறந்தவர் அன்னை மரியாள். அவரது அமலோற்பவத்தின் நினைவாக ஈரோட்டில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயம்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவை அடுத்து உள்ள பாரத ஸ்டேட் வங்கி சாலையில் அமைந்து உள்ள இந்த ஆலயம் 1867-ம் ஆண்டு முதல் வழிபாட்டுத் தலமாக உள்ளது. இந்த ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு நீரூற்று தோன்றியதாகவும், அன்னை மரியாள் காட்சி அளித்து நோயாளிகளைக் குணமாக்கியதாகவும் வாய்மொழிச் செய்திகள் கூறுகின்றன. எனினும், இவை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களோ, வரலாற்றுப் பதிவுகளோ இருப்பதாக தெரியவில்லை.  

1968-ம் ஆண்டு புதிய கோபுரத்துடன் கூடிய தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்துக்கு சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆலயத்தில் இயேசுவின் பாடுபட்ட சிலுவை உள்ளது. புனித அமல அன்னையின் சொரூபம், புனித சூசையப்பர் சொரூபம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. குழந்தை இயேசு, சகாய அன்னை, இறை இரக்கத்தின் இயேசு, புனித அந்தோனியார் நவ நாள்கள் சிறப்பு வழிபாடாக செய்யப்படுகிறது. இந்த வழிபாடுகளில் பங்கேற்கும் பலரும் ஜாதி, மத வேறுபாடு இன்றி ஏராளமான நன்மைகளை பெற்று சாட்சியம் கூறி உள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபை டிசம்பர் 9 ஆம் தேதியை மாதாவின் அமலோற்பவ திருவிழாவாக கொண்டாடுவதையொட்டி இந்த ஆலயத்திலும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 2 ஆவது வாரம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஈரோட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்கிறார் அமல அன்னை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com