தேவ குழந்தையைத் தேடி அலையும் புனித பெபானா என்ற கிறிஸ்துமஸ் பாட்டி

இத்தாலி நாட்டில் சாண்டா கிளாஸ் கிடையாது. அவருக்குப் பதிலாக அங்கே புனித பெபானா என்ற பெண்மணிதான் கிறிஸ்துமஸ் பாட்டி.
ரோமிலுள்ள செயின்ட் பிபியானா
ரோமிலுள்ள செயின்ட் பிபியானா

சான்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஓர் ஆணாதிக்க வடிவம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உலக அளவில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குப் போட்டியாக, கிறிஸ்துமஸ் பாட்டிகளும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ரஷியாவில் கிறிஸ்துமஸ் தாத்தாவும் உண்டு. அவருக்குத் துளியும் தொடர்பில்லாமல் பாபோக்சா என்ற கிறிஸ்துமஸ் பாட்டியும் உண்டு.

அதுபோல இத்தாலி நாட்டில் சான்டா கிளாஸ் கிடையாது. அவருக்குப் பதிலாக அங்கே புனித பெபானா என்ற பெண்மணிதான் கிறிஸ்துமஸ் பாட்டி. பெபானாவின் கதை நெகிழ்வூட்டும் கதை.

இயேசு பாலன் பிறக்க இருந்த பெத்லகேம் நகருக்கு அப்பால் ஒரு நெடுஞ்சாலை. அந்த நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு குடிசை. அங்கே பெபானா என்ற வயதான பெண்மணி வாழ்ந்து வந்தார். ஒரு பசு, ஒரு கோவேறு கழுதை, ஒரு பூனை ஆகியவற்றைத் தவிர அவருக்கு வேறு யாரும் கிடையாது.

ஒருநாள் குளிர் மிகுந்த நள்ளிரவு நேரம்! வெளியே இனிமையான பாடல் ஒலி கேட்டது. அத்துடன் ஆள்கள் நடமாடும் ஓசை வேறு. பெபானா விழித்தெழுந்து ஜன்னலைத் திறந்து பார்த்தார். வெளியே வானத்தில் பிரகாசமான ஒரு வால் நட்சத்திரம் ஒளிவீசிக் கொண்டிருந்தது. அந்த ஒளியில் இரவுகூட பிற்பகல் போல வெளிச்சமாக இருந்தது. அந்த நெடுஞ்சாலை வழியே சில மேய்ப்பர்கள் தோளில் ஆட்டுக்குட்டிகளைச் சுமந்தபடி மகிழ்ச்சியுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் 2 பேர் பெரியவர்கள். 3 பேர் சிறியவர்கள். அனைவரும் மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் பாடிக்கொண்டே சென்றார்கள். பெபானா அவர்களை அழைத்து ‘என்ன?’ என்று விசாரித்தார்.

மேய்ப்பர்கள் சொன்னார்கள். ‘பெத்லகேமில் உலகை மீட்கப் போகும் மீட்பர் ஒருவர் பிறந்திருக்கிறார். தேவதூதர் வானில் தோன்றி இந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்தார். அந்த தேவபாலனைக் கண்டு வணங்கி வழிபடப் போய்க் கொண்டிருக்கிறோம்’ என்றனர்.

பிறகு வானில் சுடர்விட்ட நட்சத்திரத்தைக் காட்டினார்கள். ‘தேவபாலன் பிறந்ததற்கு அடையாளமாக இந்த நட்சத்திரம் வானில் தோன்றியிருக்கிறது. தேவபாலனை நாம் தேடிச் சென்றால் இந்த நட்சத்திரம் வானில் நகர்ந்தபடி நமக்கு வழிகாட்டும். ஏன் நீயும் வந்து தேவபாலனைப் பார்ப்பதுதானே?’  என்றார்கள்.

பெபானா அதற்கு பதில் சொல்லவில்லை. பெபானா பேசா மடந்தையாக நின்றதும் மேய்ப்பர்கள் அவர்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

மறுநாள் காலை. பெபானா முழுக்க முழுக்க சிந்தனையில் ஆழ்ந்தபடி இருந்தார் ‘தேவபாலனைப் பார்க்க எனக்கும் விருப்பம்தான். அவர் இருக்கும் இடத்தைக் காட்ட நட்சத்திரம்கூட வானில் வலம் வருகிறது. இருந்தாலும்கூட தேவபாலனைப் பார்க்க வெறுங்கையுடன் போக முடியுமா? எனவே தேவ குழந்தைக்கு முதலில் பரிசுப் பொருள் ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று எண்ணினார். 

பெபானா சுறுசுறுப்பாக இயங்கினார். தன்வசம் இருந்த பருத்தி, பட்டு, கம்பளி நூல்களைத் திரட்டி அழகழகான பொம்மைகளைச் செய்தார். பாவம் நேரம் போவது தெரியாமல் வேலை செய்ததால் இரவு வந்துவிட்டது. அன்று இரவும் வானத்தில் அந்த அதிசய விண்மீன் தோன்றி ஒளி வீசியது. ஆனால்,  பெபானாவின் வேலை முடியவில்லை. அன்று பொழுது விடிந்தபிறகுதான் பொம்மை தயாரிப்புப் பணி முடிவடைந்தது.

அன்று காலை, பெபானா மீண்டும் சிந்தனையில் மூழ்கினார். தேவ குழந்தைக்கு மட்டும் பொம்மை பரிசு கொடுத்தால் போதுமா? அதன் தாயாருக்கும் ஏதாவது பரிசு தந்தால்தானே நன்றாக இருக்கும் என்று சிந்தித்தார். உடனே தேவ பாலனின் தாய்க்கு அழகான ஒரு கம்பளிப் போர்வையைப் பின்னினார். கூடவே அழகான இரண்டு காலணிகள் தயாராயின. தேவ குழந்தை அணிவதற்காக ஒரு சட்டை, சின்ன காலணிகளையும் பெபானா உருவாக்கினார். அதற்குள் மீண்டும் இரவு வந்துவிட்டது. வழக்கமாக வரும் தங்க வால் தாரகை அன்றும் வானில் தலைகாட்டியது. பெபானாவைப் பார்த்து புன்னகைத்தது. பாவம் பெபானா. அன்றும் அவரது கைவேலை முடியாததால் பயணத்தை ஒத்திப்போட்டார்.

மறுநாள் காலை. தேவ பாலனுக்காக விதவிதமான கேக் தயாரித்து எடுத்துச் சென்றால் என்ன என்ற எண்ணம் பெபானாவுக்கு ஏற்பட்டது. சமையலில் படு கெட்டிக்காரி அவர். எனவே விதவிதமான கேக், ரொட்டி தயாரிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கினார்.

அடுக்களையில் இருந்து அருமையான கேக், ரொட்டிகளின் நறுமணம் எழுந்தது. வழியில் தனக்கும் உணவு தேவைப்படும் என்பதால் அதற்கும் சேர்த்துத் தனியாக உணவு தயாரித்துக்கொண்டார் பெபானா. அன்று இரவும் அதிசய விண்மீன் வானில் வலம்வந்தது. ‘நீ வர மாட்டாயா? என்பது போல பெபானாவைப் பார்த்து ஒளி சிந்தியது.

பெபானாவால் அன்றும் கிளம்ப முடியவில்லை. வீட்டில் ஒட்டடையும் சிலந்தி வலைகளும் இருந்ததால் தூசி தட்டி வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் பெபானா இறங்கினார். வீட்டைப் பெருக்கிக் கழுவி பளபளவென மின்ன வைத்தார். பெண்கள் வேலைதான் முடிவதே இல்லையே. முடிவில் இரவு வந்ததும் களைத்துப் போய் பெபானா படுக்கையில் விழுந்தார். அன்றைய இரவும் நட்சத்திரம் அழகாக ஒளிவீசி புன்னகை பூக்கத் தவறவில்லை.

சரியாக நள்ளிரவு நேரம்! ஒட்டகங்களின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசை கேட்டது. பெபானா எழுந்து கதவைத் திறந்து பார்த்தார். வெளியே மூன்று அரசர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தலையில் ஒளிவீசும் மணிமகுடம் அணிந்து அவர்கள் பட்டாடை உடுத்தியிருந்தார்கள். பெபானாவிடம் குடிப்பதற்கு அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். பெபானா அவர்களது தாகத்தைத் தீர்த்து, தொட்டி நிறைய நீர் ஊற்றி அவர்களது ஒட்டகங்களின் தாகத்தையும் தீர்த்து வைத்தார்.

‘நாங்கள் மூன்று பேரும் கீழ்த்திசையைச் சேர்ந்த மேகி என்ற அரசர்கள். நட்சத்திரம் வானில் வழிகாட்டியபடி நடக்க, நாங்கள் அதைப் பின் தொடர்ந்து வருகிறோம். இங்கே பெத்லகேமில் தேவபாலன் பிறந்திருக்கிறாராமே. அவரை கண்டு வணங்கி வழிபடப் போகிறோம். நீயும் வருகிறாயா?’

மூவரசர்களும் இப்படி அன்பொழுக பெபானாவிடம் கேட்டார்கள்.

பெபானாவுக்கு அவர்களுடன் பேசுவதற்கே பயமாக இருந்தது. ‘இல்லை. நான் வரவில்லை. நான் பிறகு வந்து தேவபாலனைப் பார்த்து கொள்கிறேன்’ என பெபானா கூறி விட்டார். மூன்று அரசர்களும் பெபானாவுக்கு நன்றிகூறி விடைபெற்று மீண்டும் ஒட்டகங்களில் ஏறினார்கள்.

மூன்று அரசர்களின் ஒட்டகங்கள் தொலைவில் சென்று மறைந்த பிறகுதான் நாமும் அவர்களுடன் சேர்ந்து போயிருக்கலாமே என்று பெபானாவுக்குத் தோன்றியது. அவருக்கு வருத்தமாக இருந்தது. ‘தேவ பாலனைப் பார்க்க உலகின் மறு கோடியில் இருந்து இவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், நான் அருகில் இருந்தும்கூட இன்னும் போய் தேவ பாலனைப் பார்க்கவில்லையே.’

இப்படி எண்ணிய பெபானா, ‘என்ன ஆனாலும் சரி. நாளை கண்டிப்பாக தேவ பாலனைப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்’ என்று முடிவு செய்துகொண்டார். பின்னர் வானத்தைப் பார்த்தார். நட்சத்திரம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒளிதுலங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்தது. பெபானா புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார், விளையாட்டு பொம்மைகள் அனைத்தையும் இரண்டு கூடைகளில் நிரப்பி அவற்றைக் கோவேறு கழுதையின் முதுகில் ஏற்றினார். கேக், உணவு வகைகளை மறக்காமல் எடுத்துக் கொண்டார். இதர பரிசுப் பொருள்களையும் கோவேறு கழுதை மீது ஏற்றினார்.

பசுவை அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்தார். ‘பாலைக் கறந்து நன்றாக சாப்பிடுங்கள், எனது பூனைக்கும் பால் கொடுங்கள். இது நன்றாக எலியைப் பிடிக்கக் கூடிய பூனை. ஒரே ஒரு நாள்தான். நான் திரும்பி வந்து விடுவேன்’ என்றுகூறி விடைபெற்றுக் கொண்டார்.

வீட்டில் உட்கார்ந்து இரவு வரும் வரை அவர் காத்திருந்தார். வானில் அந்த வால்நட்சத்திரத்தின் வருகைக்காக கண்கொட்டாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தார். ஆனால், வால்நட்சத்திரம் அன்று வருவதாக இல்லை. பாவம் பெபானா. காத்துக் காத்து கண்கள் பூத்ததுதான் மிச்சம். அன்று நள்ளிரவு தாண்டிய பிறகும் வானில் வால் நட்சத்திரம் வரவே இல்லை.

பெபானா விடுவதாக இல்லை. இன்று எப்பாடுபட்டாவது தேவ குழந்தையைப் பார்த்தே தீருவது என்று அவர் முடிவு செய்து விட்டார். வீட்டில் இருந்து ஒரு விளக்கை எடுத்து வந்தார். அந்த விளக்கின் வெளிச்சத்தில் கோவேறு கழுதையை அழைத்துக் கொண்டு  பெத்லகேம் நோக்கி அவர் புறப்பட்டு விட்டார்.

பாவம். வழிகாட்ட நட்சத்திரம் இல்லை என்பதோடு தேவ பாலன் எங்கே பிறந்திருக்கிறார் என்ற விவரமும் வழியில் யாருக்கும் தெரியவில்லை. இரவு முழுவதும் வீடுவீடாக ஏறி இறங்கி தேவ பாலனைத் தேடினார் பெபானா. அங்கிருந்த குழந்தைகளுக்குத் தன்வசம் இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாகப் பரிசளித்தார். என்றாலும், இயேசு பாலனைத் தரிசிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோமே என்ற சோகம் அவரை வருத்தியது. அந்த ஏக்கத்தினாலேயே காலவெளியில் மங்கி மறைந்துபோனார் பெபானா.

ஆனால், பெபானா இன்னும் அலைந்துகொண்டுதான் இருக்கிறார். அதிலும் கிறிஸ்துமஸ் காலம் வந்து விட்டால் அவர் மீண்டும் மீண்டும் தோன்றி  தேவ பாலனைத் தேட ஆரம்பித்து விடுவார். கையில் ஒரு விளக்கு. பின்புறம் கழுதை மீது விளையாட்டுப் பொம்மைகள், பரிசுப் பொருள்கள் அடங்கிய கூடை இவற்றுடன் கிறிஸ்துமஸ் காலங்களில் தேவ குழந்தையை பெபானா இடைவிடாமல் தேடிக் கொண்டே இருக்கிறார்.

பின்னாளில் இந்த பெண்மணி புனித பெபானாவாக ஆகிவிட்டார். பிபியானா என்றும் அவரை அழைப்பார்கள். இவரது நினைவாக செயின்ட் பெபானா நாளை இத்தாலி நாட்டு மக்கள் இன்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

+

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com