377 ஆண்டுப் பழமை வாய்ந்த அல்லித்துறை தூய சவேரியார் ஆலயம்!

திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள தூய சவேரியார் ஆலயம் 377 ஆண்டுகளைக் கடந்து நற்செய்தி வழங்கி வருகிறது.
அல்லித்துறை தூய சவேரியார் ஆலயம்
அல்லித்துறை தூய சவேரியார் ஆலயம்

உலகம் எத்திசையிலும் சென்று, நற்செய்தியினை அறிவியுங்கள் என்ற இயேசு பிரானின் கூற்றுக்குச் சான்றாக திருச்சி மாவட்டம், அல்லித்துறையில் உள்ள தூய சவேரியார் ஆலயம், 377 ஆண்டுகளைக் கடந்து நற்செய்தி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆலய வரலாறு

1963 ஆம் ஆண்டு இயேசு சபை குருவான தத்துவப் போதகர் என்ற அழைக்கப்பட்ட ராபர்ட் தெ நோபிலி மற்றும் மறைப் பணியாளர் இமானுவேல் மார்ட்டின் ஆகியோர் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து நற்செய்தி வழங்கினர். அதில், அல்லித்துறையும் குறிப்பிடத்தகுந்தது. அப்போது, சந்தனம்மாள் என்ற பெயருடையவரால் இந்தப் பகுதியில் ஆலயம் தொடங்குவதற்கான விதை உருவானது. சந்தனம்மாளின் அசைக்க முடியாக இறை நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட பலரும் கிறிஸ்துவ மறையில் சேர்ந்தனர்.

பின்னர், அனைவரும் ஒன்றுகூடி இறைவனை வழிபடவும், மறைக் கல்வி பயிலவும், மதுரை மிஷனரி குருக்களால் குடிசைக் கோவில் அமைக்கப்பட்டது, மண் சுவர்கள், கீற்றுக் கொட்டகையுடன் கோவில் உருவானது. 1643 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடிசைக் கோவிலானது கிறிஸ்து பிறப்பு நாளன்று திறக்கப்பட்டு பல்தசார் டிகோஸ்டா எனும் இயேசு சபை குருவானவரால் முதல் திருப்பலி நடத்தப் பெற்றது.

1725 ஆம் ஆண்டில், திருச்சியை ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தபோது, அல்லித்துறை உய்யகொண்டான் ஆற்றின் குறுக்கே எழுப்பப்பட்ட பாலம், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தப் பாலமானது அடிக்கடி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், பாலத்தைக் கட்டிய அரசாங்க மேஸ்திரி, ஆவூரின் பங்குத் தந்தையாக விளங்கிய ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி எனும் இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவரின் தூண்டுதலின் பேரில், புனிதரிடம் வேண்டிக்கொண்டு ஆற்றுப் பாலத்தை கட்டி முடித்தார். பாலம் நிரந்தரமானதால், தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குடிசைக் கோயிலாக இருந்த ஆலயத்தை, சிறிய கட்டடம், அதன் மேலே அரை வட்டம் கொண்ட அமைப்புகளுடன் மாற்றி ஆலயம் கட்டப்பட்டது. மேலும், அப்போது, வீரமாமுனிவரால் புனித சவேரியார் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டு, அன்றைய தினம் முதல் தூய சவேரியார் ஆலயமாக விளங்கி வருகிறது.

ஆலயம் புதுப்பிப்பு

காலப்போக்கில் பழமையாகிப் போன இந்தக் கோயிலின் முன்பகுதி இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு 1992 இல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. திருப்பலியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அருள்தந்தையர் பன்னீர்செல்வம், லூர்துராஜ் ஆகியோரின் முயற்சியால் 2002 இல் திருப்பலி பீடம், முன்புற விரிவாக்கப்பட்ட வளாகம், கொடிக்கம்பம், மணிக்கூண்டு ஆகியவை ஆயரால் புனிதம் செய்யப்பட்டு இன்று வரை திருப்பலி மற்றும் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. மிகவும் பழுதுபட்ட கோயில் பீடம் மற்றும் மேற்கூரை வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. 

முக்கிய விழாக்கள்

1953 ஆம் ஆண்டு முதன்முறையாக சவேரியார் திருவிழா தேரோட்டத்துடன் தொடங்கப்பட்டது. அன்று  முதல்  ஒவ்வொரு  ஆண்டும்  நவம்பர்  மாதம்  கடைசி வெள்ளிக்கிழமை புனிதரின்  கொடியேற்றப்பட்டு  தொடர்ந்து  10  நாள்களுக்கு நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரையடன் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை பக்தர்களின் வேண்டுதல், சுற்றுப் பிரகாரமும், சனிக்கிழமை இரவு புனிதரின் ஆடம்பர அலங்கார தேர் பவனி திருவிழா சிறப்புத் திருப்பலியும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு நற்கருணை ஆசீருடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடையும். ஆண்டின் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். கிறிஸ்துமஸ் நாளன்று நள்ளிரவு 11.30 மணி முதல் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக நடைபெறும்.

புத்தாண்டு, ஈஸ்டர் விழாக்களும், சிறப்பு திருப்பலியுடன் நடைபெறும். மே மாதம் மாதா வணக்கம் மாதமாக சிறப்பிக்கப்பட்டு 31 நாள்களும் நவநாள் ஜெபம், பிரார்த்தனை நடைபெறும். இறுதி நாளன்று மாதா திருவுருவம் தாங்கிய சப்பர ஊர்வலமும் நடைபெறும்.

செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணியில் நடைபெறும் திருவிழாவிற்கு, இங்கிருந்து நூற்றுக்கணக்கானோர் மாலை அணிந்து, நோன்பிருந்து கொடியேற்றத்தன்று மாதா தேருடன் யாத்திரை செல்வது வழக்கம். ஆலயத்தின் தற்போதைய பங்குத்தந்தை லூ. எட்வர்ட் ராஜா அடிகளார்.

சான்றாக ஓலைச்சுவடிகள்

இந்த ஆலயத்தின் பழமைக்குச் சான்றாக அப்போது பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடிகள் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகளை ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ள மறைக் கல்வி பயிலும் பள்ளியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com