நீலகிரியின் புகழ்மிக்க தேவாலயங்களில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பெருவிழா

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் நாட்டின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்றாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் பெயர்பெற்றது. 
புனித ஸ்டீபன் தேவாலயம்
புனித ஸ்டீபன் தேவாலயம்

உதகை: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் நாட்டின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று என கூறினாலும் இம்மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு அம்சமும், பழமை, பாரம்பரியத்தை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது. இவற்றில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்.

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது எனலாம். அவற்றில் கடந்த 1829ம் ஆண்டில்  இங்கிலாந்தின் 4ம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளையொட்டி உதகையில் உருவாக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயமும், 1837ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புனித  மரியன்னை தேவாலயமும் பழமைவாய்ந்த பாரம்பரிய தேவாலயங்களாகும்.

புனித ஸ்டீபன் தேவாலயம்
புனித ஸ்டீபன் தேவாலயம்

புனித ஸ்டீபன் தேவாலயம் கிறிஸ்தவர்களில் சிஎஸ்ஐ பிரிவினருக்காகவும், புனித மரியன்னை தேவாலயம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும். அதிலும் புனித ஸ்டீபன் தேவாலயத்தில் ஆங்கில வழியிலான வழிபாடும், புனித மரியன்னை தேவாலயத்தில் தமிழ் வழியிலான  வழிபாடும்  நிறைவேற்றப்பட்டன. 

ஆங்கில வழிபாட்டிற்கு அதிகளவிலான ஆங்கிலேயர்களும், தமிழ் வழிபாட்டிற்கு குறைந்த அளவிலானவர்களும் வந்து கொண்டிருந்தனர். அதிலும்,  ஆங்கில வழிபாட்டிற்கு ஆங்கிலம் தெரியாதவர்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையும் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே தமிழ் வழிபாட்டிற்கான தேவாலயங்கள் அதிகளவில் உருவாகின. அதேபோல, பெரிய ஆலயங்களை அமைக்க வசதி மற்றும் வாய்ப்பில்லாத இடங்களில் சிறிய வடிவிலான சாலையோர வழிபாட்டுத் தலங்களும் உருவாக்கப்பட்டன. 

புனித ஸ்டீபன் தேவாலயம்
புனித ஸ்டீபன் தேவாலயம்

19ம் நூற்றாண்டில் நீலகிரியில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு பிரத்யேகமாக வழிபாட்டுத் தலம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்ததால் அப்போதைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த லார்டு லஷ்ஷிங்டன் பிரபுவின் ஏற்பாட்டின் பேரில் 1829-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி புனித ஸ்டீபன் தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றுதான் இங்கிலாந்தின் மன்னரான நான்காம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளாகும். அதைத்தொடர்ந்து கொல்கத்தாவின் ஆயராக இருந்த ஜான் மத்தியாஸ் டர்னர் 1830-ம் ஆண்டில் நவம்பர் 5-ம் தேதி இந்த தேவாலயத்தை திறந்து வைத்த பின்னர் பொதுமக்கள் பங்கேற்பதற்காக 1831-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு முதல் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தேவாலயத்தின் விசேஷம் என்னவெனில் அப்போது ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில் சிறீரங்கப்பட்டினத்திலிருந்த திப்புவின் பிரமாண்ட தேக்கு மர மாளிகையை உடைத்து அங்கிருந்து சீகூர் பள்ளத்தாக்கு வழியாக உதகைக்கு கொண்டு வரப்பட்ட அந்த மரங்கள்தான் புனித ஸ்டீபன் தேவாலயத்திற்கு பயன்படுத்தப்பட்டன. 

புனித ஸ்டீபன் தேவாலயம்
புனித ஸ்டீபன் தேவாலயம்

அப்போது  இந்த தேவாலயத்தை கட்டுவதற்காக செலவான தொகை ரூ.24,000 மட்டுமேயாகும். இந்த ஆலயத்திலுள்ள மணி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும். வழக்கமாக தற்போதைய தேவாலயங்களில் காணப்படும் மணியைப்போல அல்லாமல் ஆங்கில வி எழுத்து வடிவிலான சுவற்றில் சுத்தியல் போல உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு மோதும்போது ஏற்படும் அதிர்வு மணியடித்தால் ஏற்படும் ஒலியைப் போன்ற சிறப்பு சப்தத்தை உருவாக்கும்.  இந்த ஆலயத்திற்குள் குழந்தை இயேசு  தாய் மரியாள் மற்றும் தந்தை சூசை ஆகியோருடன்  இருப்பதைப் போன்ற காட்சியும், இயேசுவின் கடைசி இரவு உணவு காட்சியும், சிலுவையில் அவர் அறையப்பட்ட காட்சியும் மட்டுமே  இடம் பெற்றுள்ளன. ஆனால், இவற்றை படமெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதைப்போல இந்த தேவாலயத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆங்கிலேயர்களின் கல்லறைகளும் அமைந்துள்ளன.  இன்னமும் ஆங்கிலேய பழமை மாறாமல் இந்த தேவாலயத்தில் வார வழிபாடும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, உதகையின் முதல் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் எனும் பெருமையை கடந்த 1837-ம் ஆண்டில் புனித  மரியன்னை குன்று பகுதியில் கட்டப்பட்ட தூய மரியன்னை தேவாலயம் பெற்றுள்ளது. அப்போது மிகச்சிறிய அளவில் கட்டப்பட்ட இந்த ஆலயம்,  பின்னர் கடந்த 1870ம் ஆண்டில் அங்கிருந்த பிரெஞ்சு பாதிரியார்களான அருள்திரு பியராம் மற்றும் அருட்திரு கபீல் ஆகியோரின் முயற்சியால் புதிய இடத்தில் பெரிய தேவாலயமாக உருவாக்கப்பட்டு பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்ட அன்னை மரியாளின் சுரூபம் பிரதானமாக  வைக்கப்பட்டது. 

புனித  மரியன்னை தேவாலயம்
புனித  மரியன்னை தேவாலயம்

அப்போது இந்த தேவாலயம் மைசூரு பேராயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதைத்தொடர்ந்து  உதகை மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த 2012ம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட  இந்த தேவாலயத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட குதால்பே அன்னையின் சுரூபம் பிரதானமாக  அமைக்கப்பட்டுள்ளது.

உதகை மறைமாவட்ட ஆயர் இல்லத்தின் அருகிலேயே அமைந்துள்ள இந்த ஆலயம் உதகையிலுள்ள கிறிஸ்தவர்களின் பல்வேறு  பக்தி முயற்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தற்போது உதகை மறைமாவட்டம்  நீலகிரி மற்றும் ஈரோடு பகுதிகளை உள்ளடக்கியதாகும். இதன் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ஆலயங்களும், சிற்றாலயங்களும், கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆங்கில  வழிபாடு, தமிழ் வழிபாடு என பிரிந்திருந்தாலும், கிறிஸ்தவர்களின்  முக்கிய மூன்று கொண்டாட்டங்களான கிறிஸ்து பிறப்பான கிறிஸ்துமஸ், கிறிஸ்துவிற்கு பெயர் வைக்கப்பட்ட 8வது நாளான புத்தாண்டு தொடக்க நாள் மற்றும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஆகியவை இரவு நேர வழிபாட்டிலேயே கொண்டாடப்படுகின்றன.

அதிலும்  டிசம்பர் மாதம் உதகையில் கடுமையான உறைபனிக்காலம் என்பதால் கடும் குளிரிலும் கிறிஸ்து பிறப்பை  கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்கள், இரவு நேர வழிபாடுகள், கிறிஸ்துமஸ் கேக் ஆகியவை  முக்கியமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர்  அன்பு, சகோதரத்துவம்,  சமத்துவம், உதவு மனப்பான்மை ஆகியவையும் நீலகிரி கிறிஸ்தவர்கள் தவறாமல் கடைபிடிக்கும்  கிறிஸ்து பிறப்பின் கால கட்டுப்பாடுகளாகும். இது ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றளவும் தொடர்வதுதான்  நீலகிரியின் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com