முகப்பு கிறிஸ்துமஸ்
இந்த கிறிஸ்துமஸ் மறக்க முடியாததா இருக்கணுமா? இதோ வழிகள்
By DIN | Published On : 24th December 2021 06:00 PM | Last Updated : 24th December 2021 06:00 PM | அ+அ அ- |

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும் பகுதிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை.. உலகளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. ஒரு சில நாடுகள், பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கொண்டாடும் பண்டிகை என்றும்கூடச் சொல்லலாம்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது. ஆங்காங்கே நட்சத்திர அலங்காரங்களும், கிறிஸ்துமஸ் மரங்களும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், வழக்கமான கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்தாகிவிட்டது. இப்படி ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியதில்லை என்று சொல்லுமளவுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் இந்த 9 இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கே கிளம்பிச் சென்றுவிட்டால், இந்த ஆண்டுதான் மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
வாருங்கள்.. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்..
1. முதலிடமே கோவாவுக்குத்தான்
கொண்டாட்டம், விடுமுறை, குதூகலம், சுற்றுலா, பொழுதுபோக்கு என்றாலே நினைவுக்கு வரும் கோவாதான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் சிறப்புவாய்ந்த கடற்கரைகளும், வேறு எங்கும் பார்க்க முடியாத இரவுநேர கேளிக்கைகளும், இந்தியாவிலேயே, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட மிகச் சிறந்த இடமாக கோவாவை மாற்றியுள்ளன.
அது மட்டுமா? போர்த்துக்கீசிய கலாசாரம், கத்தோலிக்க மக்கள் அதிகம் வாழும் கோவாவில், கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்? தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுமல்லவா?
கோவாவில் உள்ள தேவாலயங்களும், வீடுகளும் மின்னொளியில் மின்னும். மிக ரம்மியமான அலங்காரங்களும் கண்ணைப் பறிக்கும்.
இரவு நேரத்தில், குழந்தைகளும் பெண்களும் இணைந்து கிறிஸ்துவப் பாடல்களைப்பாட, குளிர்காலத்தில் மலரும் மலர்கள் எல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் காண அன்றொரு நாள் மட்டும் நள்ளிரவிலேயே பூத்துக்குலுங்கிவிடும்.
தேவாலயங்களில் நடைபெறும் இரவு நேர பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்வதும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதும் எந்த வயது வித்தியாசமுமின்றி, பாகுபாடுமின்றி நடைபெறுவதுதான் தனிச்சிறப்பே.
வண்ணமயமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோவாவில் கொண்டாட வேண்டுமென்று, உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து ஏராளமானோர் கோவாவுக்கு வந்து குவிந்து விடுவதிலிருந்தே, அதன் சிறப்பு நமக்கெல்லாம் உணர்த்தப்படுகிறது. கடல்கடந்து பரவிக்கிடக்கிறது கோவாவின் புகழ்.
2. உண்மையிலேயே கடவுளின் தேசம்தாங்க
கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஒருவர் சொட்ட சொட்ட நனைய வேண்டுமென்றால் நாம் நேராகக் கிளம்பிப்போக வேண்டிய இடம் கேரளமாகத்தான் இருக்கும். கேரளத்தில் கணிசமான மக்கள் கிறிஸ்துவர்கள்தான். இதுமட்டுமல்ல, எண்ணற்ற தேவாலயங்களும் கேரளத்தில் அமைந்துள்ளன. இதைத்தவிர உலகமே கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை கேரளத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதில் வேறுபெரிய காரணங்கள் என்னத்தான் வேண்டியிருக்கிறது.
தேவாலயங்கள் மட்டுமல்ல, வீடுகள் கூட வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். தேவாலயங்கள் அமைந்திருக்கும் வீதிகள் சொல்லவே வேண்டாம். மரங்கள் கூட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடுகள்தோறும் நட்சத்திரங்களும், கிறிஸ்துமஸ் மரங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.
சிறியதோ பெரியதோ அனைத்து தேவாலயங்களும் இரவு முழுக்க திறந்திருக்கும், ஆயிரக்கணக்கானோர் இரவுநேர பிரார்த்தனைகளில் பங்கேற்று, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் நாளில் இரவு நேரத்தில் பல இடங்களில் கிறிஸ்துவப் பாடல்கள் ஒலிப்பதை எங்கிருந்தும் கேட்கலாம். தேவாலயங்கள் அருகில் அமைந்திருக்கும் கடற்கரைகள் என அனைத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஜோராகத் தயாராகிவிடும். ஒருவர் உண்மையிலேயே கிறிஸ்துமஸை மறக்க முடியாத வகையில் கொண்டாட விரும்பினால், அதற்கு உகந்த இடம் கேரளம்தான்.
இதை வேறுமாதிரியும் சொல்லலாமாம். ஒருவர் கேரளத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினால், அதற்கு ஏற்ற நேரம் கிறிஸ்துமஸ்தான்.
3. அட நம்ம புதுச்சேரிங்க
தமிழகத்துக்கு மிக அருகே, மிகப்பெரிய கடற்கரையைக் கொண்டிருக்கும் மிகச் சிறிய யூனியன்பிரதேசம் புதுச்சேரி. இதனைக் குட்டி பிரான்ஸ் என்று கூடச் சொல்லலாம். பிரெஞ்சு காலனி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் புதுச்சேரியும் ஒன்றாக இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டுச் செல்லும்போது, அவர்களது கலாசாரத்தை மட்டுமல்ல, அவர்களது கலாசாரத்தை பறைசாற்றும் மிக அழகான கட்டமைப்புகளைக் கொண்ட ஏராளமான தேவாலயங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.
ஏராளமான பிரெஞ்சு பாரம்பரிய மக்கள் வசிப்பதோடு, இங்கு கிறிஸ்துவர்களும் ஏராளம். அது மட்டுமல்ல அவர்கள் தங்களது பாரம்பரியமுறைப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. மிகுந்த உற்சாகத்தோடு கிறிஸ்துமஸ் அங்கு கொண்டாடப்படுவதை நேரில் பார்ப்பதே கூடுதல் உற்சாகம்தான்.
ஜென்மராக்கினி மாதா பேராலயம், புனித மேரி தேவாலயம், புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்டவை, புதுச்சேரியில் மிகச் சிறப்பான அலங்காரங்களைக் கொண்டிருக்கும் தேவாலயங்களில் புகழ்பெற்றவை. இந்த அலங்காரங்களைக் காணவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெளியூரில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதுவும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவராக இருந்துவிட்டால் புதுச்சேரிதான் மிகச் சிறந்த இடமாக இருக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
4. வடகிழக்கு நகரமான ஷில்லாங்
நாட்டின் வடகிழக்கு நகரமான விளங்கும் ஷில்லாங்கில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்துவர்கள். மேகாலயாவின் முக்கிய நகரமான ஷில்லாங்கில் ஒருவர் இறங்கிவிட்டாலே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் குதூகலம் நமது மனதுக்குள் வந்து ஒட்டிக்கொள்ளும். பிறகு என்ன, நீங்களே வேண்டாம் என்றாலும் கூட, அந்த குதூகலத்திலிருந்து வெளியே வர முடியாது. தேவாலயங்கள் இருக்கும் தெருக்கள் முழுக்க வண்ண மின்விளக்குகளால் ஒளிர்ந்து, இரவையும் பகலாக்க முயல, அங்கிருக்கும் மக்களோ, இந்த முயற்சிக்கு உறுதுணையாக ஒளிக்கு ஒளிக்கூட்டிக்கொண்டிருப்பார்கள். வடகிழக்குப் பகுதியில் ஷில்லாங் நிச்சயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான மிகச் சிறந்த இடமாக உங்களை வரவேற்கும்.
தேவாலயங்களில் நடைபெறும் இரவு நேரப் பிரார்த்தனையின்போது, தேவாலய வளாகங்களில் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதும், மெல்லிசைகள் இசைப்பதும் உங்களுக்கு நிச்சயம் பல ஆண்டுகளுக்கு மறக்கவியலாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக அமைந்துவிடும்.
இதற்கெல்லாம் மகுடம் சேர்ப்பதுபோல, அப்பகுதியின் இயற்கை எழில்கொஞ்சம் அழகு, வகை வகையான உணவுகள், மக்களின் கொண்டாட்டப் பாங்கு அனைத்தும் உங்கள் கால்கள் தரையில் இருப்பதை உணர வைக்கவே இயலாது என்பது உறுதி.
5. மும்பையிலும் களைகட்டும்
பொருளாதாரத்தில் முன்னணியிலிருப்பவர்கள் பலரும் வசிக்கும் நகரம், நாட்டின் நுழைவாயில், ஏராளமான பகுதிகளிலிருந்து வந்து குடியேறிகளாக வாழும் பகுதியான மும்பை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மிகச் சிறந்த இடமாக மாறியிருக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, மும்பையின் ஒரு பகுதியான பாந்த்ரா சொர்க்கம் போல காட்சியளிக்கும் என்றால் அது மிகையில்லை.
கத்தோலிக்க மக்கள் அதிகம் வசிக்கும் ஹில் ரோடு பகுதி அலங்கரிக்கப்பட்டிருப்பதை முதல் முறையாக பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் மதிமயங்கிப் போய்விடுவார்கள். மிக ரம்மியமாக காட்சியளிக்கும் தேவாலயங்கள் மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல, ஹில் சாலையிலிருக்கும் மரங்கள் கூட, உள்ளூர் மக்களால் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போதே, அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் குதூகலம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
6. செம்ம நகரம் பெங்களூரு
எண்ணற்ற மிக அழகான தேவாலயங்களைக் கொண்ட நகரமாக விளங்கும் பெங்களூருவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றால் களைகட்டும். ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட ஏராளமான மிகப் பழமையான தேவாலயங்கள், ஏற்கனவே இருக்கும் அழகோடு, அலங்காரங்களும் சேர்ந்து கொண்டு, அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் மாதத்திலேயே, அங்கு பண்டிகைக்கான கோலாகலம் தொடங்கிவிடும். பிரிகேட் சாலையில் உள்ள செயின்ட் பாட்டிரிக்ஸ் தேவாலயமும், ஒசூரில் உள்ள தேவாலயங்களும் இதில் குறிப்பிடத்தக்கவை.
இங்கு பலவகையான உணவுகளும் கிடைக்கும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறந்த விருந்தாகவும் மாறும். பிளம் கேக் முதல் இஞ்சி தேநீர் வரை எதை விரும்பினாலும் தேடித்தேடி சாப்பிட பல உணவகங்கள் . எம்ஜி சாலை முழுக்க புகழ்பெற்ற உணவகங்களின் வாசம்தான். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஒருவர் பெங்களூரு சென்றுவிட்டால், அங்கிருந்து கிளம்பும்போது, நிச்சயம் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்.
7. கோலாகலத்தில் சிக்கிம்
சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த பகுதியாக இருக்கும் சிக்கிமில், கிறிஸ்துமஸ் பண்டிகை எப்படி கொண்டாடப்படும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
இந்தியாவின் மிகச் சிறிய வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கிறிஸ்துமஸ் என்றாலே, மிகச் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு இடமில்லாமல் போகாது. பனி உறையும் இரவுகள், ஏராளமான சுற்றுலாத் தலங்கள் என அனைத்துமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.
குளிர்காலத்தில் சென்று பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் நிச்சயம் சிக்கிம் இடம்பெற்றிருக்கும் போது, அந்த நாள்களில் வரும் ஒரு பண்டிகை என்பதால் கிறிஸ்துமஸ் வெகுச் சிறப்பானக் கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கும்.
அனைத்து வீடுகளிலும், கிறிஸ்துமஸ் மரங்களும் நட்சத்திரங்களும் தவறாது இடம்பெற்றிருக்கும். சாலைகளும், சாலையோர மரங்களும் கூட அன்று விழாவுக்குத் தயாராகியிருக்கும். எங்குப் பார்த்தாலும் கேக் மணமும், வருத்த இறைச்சிகளின் வாசமும்தான். மாநிலத்தின் பல பகுதிகளிலும் நள்ளிரவு முழுக்க பிரார்த்தனைக் கூட்டங்களும், கொண்டாட்டங்களும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக திருமணம் முடித்தவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட உகந்த இடமாக சிக்கிம் இருப்பதாக போய்வந்த அனுபவசாலிகளின் கூற்றாகவும் உள்ளது.
8. குளுகுளு மணாலி
நாம் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கி வந்து அலங்கரித்து வைக்க வேண்டும். ஆனால், மணாலியில் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் பனித்துகள்களால் மிக அழகாக இயற்கையே அலங்கரித்துவைத்திருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை இயற்கையே கொண்டாடும் என்றால், கொண்டாட்டம் எப்படி இருக்குமல்லவா?
மணாலிக்குச் செல்லும் வாகனங்கள் எதுவுமே வேகமாகச் செல்லாது. ஏனென்றால் அதன் அழகை பார்த்து ரசித்தபடி செல்வதால்தான். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட மணாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருமே, ஒருவித குதூகலத்துடன்தான் வருவார்கள். அதோடு, ஏற்கனவே குளுகுளு மணாலியில் இருக்கும் கொண்டாட்ட உற்சாகமும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்.
உணவகங்கள், விடுதிகளின் வாயில்களில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் நின்று கொண்டு வரவேற்பு அளிப்பது முதல், இமாச்சலப் பகுதியில் சிறப்பு வாய்ந்த உணவுகளை உண்டு மகிழ்வது வரை அனைத்தும், உள்ளூர் மணத்தோடு, பண்டிகையின் ருசியை சேர்த்து வழங்கும்.
அனைத்துக்கும் மேலாக, இங்கு நிலவும் தட்பவெப்பநிலைதான், உண்மையிலேயே கொண்டாட்டத்தைக் கொடுக்கும், இதுவரை பனிமழையைப் பார்க்காதவர்கள் என்றால், நிச்சயம் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். வாழ்வில் மறக்க முடியாததுமாகக் கூட. பனியில் விளையாடி மகிழ்வது, எங்குப் பார்த்தாலும் கூட்டம், குதூகலம் என்பதை ஒரு முறை போய்ப் பார்த்துவிட்டு வந்தால்தான் தெரியும்.
9. கடைசியாக சிங்காரச் சென்னை
சென்னையில் பல புகழ்பெற்ற தேவாலங்கள் உள்ளன. சென்னையில் வசிப்பவர்களாக இருக்கட்டும், பணி நிமித்தமாக வந்தவர்களாகட்டும், இதுபோன்ற பண்டிகைகளைக் கொண்டாட சென்னையை பலராலும் தவிர்க்கவியலாது. ஒவ்வொரு வணிக வளாகங்களிலும் கிறிஸ்துமஸ் மரங்கள் வெகுச் சிறப்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். வணிக வளாகங்கள் கூட சுற்றுலாத் தலங்களைப் போல மாறிவிடும்.
கடற்கரை, இரவு நேர தேவாலயக் கூட்டங்கள், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் என அனைத்துக்கும் ஏற்ற இடமாகவே சென்னை உள்ளது.
பல உணவகங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வழங்குவதோடு, பிரத்யேக ஏற்பாடுகளையும் செய்திருக்கும். பல தேவாலயங்கள், மிக நவீனமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் பலரையும் தன்பால் ஈர்க்கும் தேவாலயங்கள் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊட்டி என்ன கொடைக்கானல் என்ன.. மார்கழி மாதக் குளிரில் சென்னையே இரவு நேரங்களில் மிகச் சில்லென்று நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால் எங்கும் செல்ல வேண்டாம், நம்ம சிங்காரச் சென்னையே கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட ஒரு சிறந்த இடம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.