கன்னட படம் ஒன்றில் நடிக்க ஆசை தெரிவித்திருக்கிறார் சமீராரெட்டி. பல்வேறு மொழிப் படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இதுவரை கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து தன் டிவிட்டரில் சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது, ""கன்னட சினிமாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் நிறைய கன்னட சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் நடிகையான பிறகு எனக்குப் பிடித்த கன்னட சினிமாவில் ஒரு வாய்ப்புக் கூட எனக்கு வரவில்லை. கன்னட மொழி பேசும் என் தோழிகள் எப்போது கன்னட படத்தில் நடிக்கப் போகிறாய்? என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நானும் வாய்ப்பை எதிர்பார்த்துதான் இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அவர்களிடம் சொல்லி வருகிறேன். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. கன்னடத்தில் மட்டும்தான் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பைத்தான் இப்போது ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார் சமீராரெட்டி.