கேரள எல்லைப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய மனிதராக வாழ்ந்தவர் வெட்டோத்தி சுந்தரம். இவரின் வாழ்வை மையமாக வைத்து வடிவுடையான் இயக்கி வரும் படம் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. கரண் நாயகனாக நடிக்கிறார். அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.
""தனி மனிதனின் வாழ்வியல் பதிவாக இந்தப் படம் உருவாகியுள்ளதால், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில்தான் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. வளர்ச்சி மிகுந்த பகுதி இந்த மாவட்டம். தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் பேர் இங்குதான் இருக்கிறார்கள். ஆனால் 80 சதவீத குற்றங்கள் இங்கு மலிந்திருக்கின்றன. ஏன் எப்படி ஆனது என்பதற்கான பதில்தான் இந்தப் படம். கரண், அஞ்சலி, முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் சரவணன் உள்ளிட்ட அனைவரும் குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழியிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தின் பாரம்பரிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருக்கிறார் வித்யாசாகர். பாடல்களும், இசையும் புது அனுபவமாக இருக்கும்'' என்றார் இயக்குநர் வடிவுடையான்.