சுடச்சுட

  
  prana

  இந்திய திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் பிராண் கிருஷண் சிகந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த பிப்ரவரி மாதம் 93 வயதை பூர்த்தி செய்தார். 60 ஆண்டுகள் நடிப்புத் துறையில் கோலோச்சிய பிராண், ஹீரோ, வில்லன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  1940ஆம் ஆண்டு முதன் முதலாக பஞ்சாபி மொழியில் உருவான "யம்லா ஜட்' திரைப்படத்தில் பிராண் நடித்தார். "மதுமதி', "ஜித்தி', "ராம் அவுர் ஷ்யாம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவர், மக்கள் மத்தியில் வெறுப்பின் சின்னமாக விளங்கினார்.

  இந்திய திரைப்படத் துறையின் தந்தையாக விளங்கிய தாதா சாகேப் பால்கே நினைவாக வழங்கப்படும் இந்த விருது, மே 3ஆம் தேதி பிராணுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பை அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து, பிராணின் மகன் சுனில் சிகந்த் கூறுகையில், ""எனது தந்தைக்கு பால்கே விருது கிடைத்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது'' என்றார்.

  எனினும், இந்த விருது பிராணுக்கு காலதாமதமாக வழங்கப்பட்டிருப்பதாக திரைப்படத் துறையினர் கூறியுள்ளனர். பிரபல நடிகர் ரிஷி கபூர் கூறுகையில், ""பிராணுக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், இதை முன்கூட்டியே வழங்கியிருக்க வேண்டும்'' என்றார்.

  எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற பிரேம் சோப்ரா கூறுகையில், ""தாமதமானாலும் பிராணுக்கு பால்கே விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிப்புத் துறையில் முன்னுதாரணமாக விளங்கிய அவர் நீண்ட காலம் இத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai