சுடச்சுட

    
    cheran

    திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினி சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் சனிக்கிழமை காவல் துறையினர் நடத்திய விசாரணையின்போது சுமுக முடிவு எதுவும் ஏற்படாததால் காதலன் சந்துருவை அவரது வீட்டுக்கு அனுப்பிய போலீஸôர், தாமினியை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

    சேரன் புகார்: காதலனால் மிரட்டப்படும் தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இயக்குநர் சேரன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சனிக்கிழமை புகார் மனு கொடுத்தார்.

    அவர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: நான் காதலுக்கு எதிரானவன் கிடையாது. எனது இரண்டாவது மகள் தாமினி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உதவி இயக்குநரான சந்திரசேகரன் என்ற சந்துருவை காதலிப்பதாகக் கூறினார். அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, அவர் பெற்றோரை அழைத்து பேசினேன். அப்போது தாமினி கல்லூரி படிப்பை முடித்ததும், திருமணத்தை நடத்தலாம் என கூறினேன்.

    இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், சந்துருவை பற்றி விசாரித்ததில் அவர் நல்லவர் இல்லை என்பதும், பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் சந்துரு செல்போன் மூலம் தாமினிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    தொடர்ந்து மிரட்டாமல் இருக்க பெரும்தொகை தர வேண்டும் எனவும் தாமினியிடம் சந்துரு கேட்டுள்ளார்.

    இதையடுத்து தாமினி கடந்த மாதம் சந்துரு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்நிலையில் ஆயிரம் விளக்கு போலீஸôர் எங்களை விசாரணைக்கு வெள்ளிக்கிழமை அழைத்தனர். அங்கு போலீஸôர், தாமினி-சந்துரு காதலுக்கு நான் அச்சுறுத்தலாக இருப்பதாக புகார் தெரிவித்திருப்பதாகக் கூறினர்.

    போலீஸôரின் விசாரணையின்போது தாமினி என்னிடம் பேச சந்துரு குடும்பத்தினர் விடவில்லை. எனது குடும்ப நண்பர்கள் தாமினியிடம் பேசியபோது, அவர், தான் சூழ்நிலைக் கைதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சந்துரு என் மகளை மிரட்டியே என் குடும்பத்தினர் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார்.

    என் மகள் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக என் மீது புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளார். எனவே ஏற்கெனவே கடந்த மாதம் தாமினி, சந்துரு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகள் தாமினிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆணையரிடம் சேரன் மனு கொடுத்தபோது இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    விசாரணை: இதற்கிடையே வெள்ளிக்கிழமை சேரன் மீது தாமினி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில் தாமினி, சந்துரு ஆகியோர் ஆஜராகினர். சேரனும் விசாரணைக்கு ஆஜரானார். இரு தரப்பினரிடமும் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் தாமினி, சந்துருவுடன் இருப்பேன் என உறுதியாகக் கூறினார். அதே நேரத்தில் சேரன், சந்துருவை நம்பி தாமினியை அனுப்ப மாட்டேன் என தெரிவித்தார்.

    இரு தரப்பினரிடமும் துணை ஆணையர் சிவக்குமார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார். எனினும் சனிக்கிழமை எவ்வித சுமுக முடிவும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி உடல்நலக்குறைவு காரணமாக மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai