"தலைவா' பட ரிலீஸ் எப்போது?

பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னரே "தலைவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தலைவா' பட ரிலீஸ் எப்போது?

பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னரே "தலைவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட "தலைவா' படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொடநாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் ஜெயலலிதா வந்த பின்னரே இந்த பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

திரையரங்குகளுக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக வந்த மிரட்டல்களையடுத்து, "தலைவா' படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து விளக்கம் கொடுக்க நினைத்த, படக்குழுவினரின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் தமிழகம் தவிர்த்து கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சில வெளிநாடுகளிலும் வெள்ளிக்கிழமை படம் வெளியானது.

இதையடுத்து தமிழகத்தில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளதால், முதல்வரின் சென்னை வருகைக்கு பின்னரே பேச்சுவார்த்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

கொடநாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. அதன் பின்னரே பேச்சுவார்த்தை குறித்து முழு விவரம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தெரிவித்தார்.

காவல்துறை காரணம் அல்ல - டி.ஜி.பி: இதற்கிடையே "தலைவா' படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டிருக்க கூடிய தாமதத்துக்கு காவல்துறைக்குத் தொடர்பு இல்லை என தமிழக காவல் துறைத் தலைவர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பாதுகாப்பு அச்சுறுத்த்ல் காரணமாக "தலைவா' படம் வெளியாவதை தமிழக காவல் துறை தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. "தலைவா' படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்குமாறு தமிழக காவல் துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள கால தாமதம் எதிலும் காவல்துறைக்குத் தொடர்பு இல்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் அனைத்தும் திரைப்படத் துறையினரைச் சார்ந்தவை'' என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com