Enable Javscript for better performance
நடன இயக்குநர் ரகுராம் காலமானார்- Dinamani

சுடச்சுட

  

  பிரபல நடன இயக்குநர் ரகுராம் (64) மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.

  பாரம்பரியமிக்க கலை குடும்பத்தில் 1948-ஆம் ஆண்டு பிறந்த ரகுராமுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பைக் காட்டிலும் நடனத்தில்தான் ஆர்வம் இருந்தது. தமிழ் திரையுலகில் சாதனை இயக்குநராக திகழ்ந்த கே.சுப்பிரமணியத்தின் பேரனான ரகுராம், 6 வயது முதல் நடனப் பயிற்சியை மேற்கொண்டார். தொடக்க காலத்தில் கதகளி நடனத்தை ஆர்வமாக கற்று வந்தார். பின்னர் தன் சித்தியும் நடனக் கலைஞருமான பத்மா சுப்ரமணியத்துடன் இணைந்து கே.ஜி.சாரா என்பவரிடம் பரதக் கலையைக் கற்றார்.

  மேடை நாடகங்களில் நடனமாடும் வாய்ப்புகளின் மூலம் தனது திறமையை நிரூபித்தார் ரகுராம். அதன் பின் பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் நடனக் குழு, நடிகை வைஜெயந்திமாலா நடனக்குழுக்களில் நடனமாடி வந்தார்.

  சிவாஜியின் நடிப்பில் உருவான "படிக்காத மேதை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜன் நடித்த "அருணகிரிநாதர்' படத்தில் பாலமுருகன் வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்த ரகுராம், அக்காலட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமாக திகழ்ந்த நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

  அப்போது ""முத்துத் திருநகை...'' பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1974-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "கன்ன வயசு' படத்தின் மூலம் நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார். நடனத்தோடு படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் ரகுராம் திறமையை வெளிப்படுத்தினார்.

  எழுத்தாளர் வி.சி.குகநாதனோடு இணைந்து "மணிப்பூர் மாமியார்', "கண்ணா நீ வாழ்க' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். வங்காளத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான "பாக்ய தேவ்தா' என்ற படத்தை இயக்கினார். நடன இயக்குநர் தங்கப்பனிடம் பணியாற்றிய போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் பாலசந்தரின் அநேக படங்களுக்கு ரகுராம்தான் நடனம் அமைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுடன் "காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாடகத்தில் ரகுராம் நடித்துள்ளார்.

  தமிழக அரசின் கலைமாமணி விருது, "தேவர் மகன்' படத்துக்காக மாநில அரசு விருது, நடன கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் என பல விருதுகளை ரகுராம் பெற்றுள்ளார்.

  ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள்: மறைந்த ரகுராமின் உடல் மகாலிங்கபுரம், காம்தார் நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரகுராம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் பாலசந்தர், மனோபாலா, நடிகைகள் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். ரகுராமுக்கு நடிகை சுஜா, நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) இறுதிச் சடங்குகள் மின் மயானத்தில் நடைபெறவுள்ளன.

  தமிழக பாஜக இரங்கல்: ரகுராம் மறைவுக்கு தமிழக பாஜக இரங்கல் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: ரகுராம் இறந்த துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பெரிதும் போற்றியவர். தேசியம், தெய்வீகம் என இரண்டையும் இரு கண்களாகக் கருதி வாழ்ந்தவர். அவரது இழப்பு கலை உலகுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai