சுடச்சுட

  

  "நய்யாண்டி' படத்தில் டூப் வைத்து ஆபாசம்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகை நஸ்ரியா புகார்

  By dn  |   Published on : 08th October 2013 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nazriya

  "நய்யாண்டி' படத்தில் டூப் வைத்து தன்னை ஆபாசமான காட்சிகளில் காட்டியுள்ளதாக நடிகை நஸ்ரியா நஸிம் புகார் தெரிவித்துள்ளார்.

  நேரம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நஸ்ரியா நஸிம். கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சற்குணத்தின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள நய்யாண்டி படம் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 11-ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை  ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார்.

  இந்தநிலையில் குறிப்பிட்ட பாடல் காட்சி ஒன்றில் தன்னை ஆபாசமாக காட்டியுள்ளதாக நடிகை நஸ்ரியா நஸிம் புகார் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து நஸ்ரியா நஸிம் "தினமணி' செய்தியாளரிடம் கூறியது:

  காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள "நய்யாண்டி' படத்தின் கதையை கேட்ட பின்னர், அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். எந்த விதத்திலும் கவர்ச்சிக்கு இடம் இல்லை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் "நய்யாண்டி' படத்தில் நடித்து முடித்துள்ளேன். வரும் வெள்ளிக்கிழமை படம் வெளிவர உள்ள நிலையில், படத்தை பார்த்த சிலர் சொன்ன தகவல்கள் எனக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

  அதன்படி படத்தில் நான் நடிக்காத சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. பாடல் காட்சியில் என்னை ஆபசாமாக காட்டியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அது நான் இல்லை. என்னைப் போன்ற பெண் ஒருவருக்கு டூப் போட்டு அந்த பாடல் காட்சியில் ஆபசாமாக காட்டியுள்ளனர்.

  என் அனுமதி பெறாமல் இப்படியொரு காட்சியில் என்னைக் காட்டியிருப்பது என்னை இழிவுப்படுத்தும் செயலாகும். திரைத்துறையில் எனக்கென ஒரு நற்பெயர் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த காட்சிகளை நீக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். என் அனுமதியுடன் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே அதில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். அங்கு இதற்கான நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.

  நஸ்ரியா தரப்பிலிருந்து வாய் மொழி புகார் மட்டுமே வந்துள்ளதாகவும், மனுவாக புகார் பெறப்பட்டவுடன் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai