சுடச்சுட

    
    varutha

    இரண்டாம் ஆட்டமானாலும் காலை மிதித்துக்கொண்டு இருட்டில் சீட் தேடும் கூட்டம் இன்னமும் தியேட்டர்களில் உலவுகிறது. அந்தக் காலத்தில் திரை மூலைகளில் கலடியாஸ்கோப் வளையல்களுக்கு நடுவே ஜிகுஜிகுன்னு டைட்டில் போடும் உத்தி போல ஏதோ ரிப்பன் ரிப்பனாக உருவித் தலைப்புப் போட்டார்கள்.

    நகைச்சுவை சேனல்களில் துணுக்குத் தோரணம் பார்த்து ரசிப்பது போல சீனுக்கு சீன் ஒட்டவைத்த பிட் காமெடிகள். அவ்வளவுதான். கதை என்ன? கலை என்ன? அப்படியெல்லாம் சாங்கோபாங்கமாகக் கேட்பவர்கள் சத்தியஜித் ரே படங்களை முக்குக் கடையில் வாடகைக்கு எடுத்து வீட்டு சோஃபாவில் ஹாயாக அமர்ந்துகொண்டு கண்டு ரசிக்கவும்.

    வருத்தப் படாத வாலிபராக கதாநாயகன் சிவகார்த்திகேயன். அடுத்த வீட்டுப் பையன் போல இருக்கிறார். ஏதோ அன்னியோன்யமான ஒரு முகம். வெட்டியாகப் பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் தெருத் தெருவாக ஊர் சுற்றி மைனர் குஞ்சாக வலம் வருகிறார். அப்படியொன்றும் வசதியானவரும் இல்லை. காதல் மற்றும் பல படங்களில் அம்மைவட்ட மூஞ்சியுடன் கரகரத் தொண்டையுடன் பயமுறுத்தும் ”காதல்” அப்பாவெல்லாம் வேஷ்டி கட்டிய காமெடியனாகக் காட்டி பயம் தெளிய வைத்தார்கள்.

    சிவா மற்றும் சூரி இணைந்து வரும் காட்சிகளில் எல்லாம் சூரியின் வசன பன்ச் ரசிக்க வைக்கின்றன. மீசை முறுக்கோடு வரும் சத்யராஜ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல நடித்து காட்சிக்கு காட்சி இறுக்கமாயிருக்கிறார். இந்தப் படத்தின் மொழியோடு இணைந்திருப்பது போல இல்லை.

    ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. பாவாடை சட்டையிலும் சரி, புடவையிலும் சரி பாந்தமாக இருக்கிறார். ஒரு ஆங்கிளில் பாய் ஃப்ரெண்டுகளை மிரட்டும் அஞ்சலியின் சாயல் தெரிகிறது. வேலை வெட்டியில்லாத பசங்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண்களைக் காட்டி இன்னும் எவ்வளவு படம் எடுப்பார்களோ தெரியவில்லை. திடீர் ஷாக் கொடுக்கிறோம் பேர்வழி என்று வைக்கும் டிவிஸ்ட் காட்சிகள் மொக்கையாக இருக்கின்றன.

    ஒரு நாள் இரவு லதாபாண்டியும் போஸ்பாண்டியும் (நாயகி, நாயகன்) கோழிக் கூடைக்குள் மறைந்து சரசம் செய்யும்போது சத்யராஜ் பால்கனி வந்து எட்டிப் பார்க்கிறார். நாமும் கையும் களவுமாகப் பிடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது ”எங்கப்பாவுக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி” என்று முத்துப் பற்கள் தெரிய குழந்தையாய்ச் சிரிக்கிறார் ஸ்ரீதிவ்யா. சகிக்கவில்லை. ஸ்ரீதிவ்யாவின் சிரிப்பு அல்ல... அந்தக் காட்சிதான்!

    காதல் தோல்வியில் சிவகார்த்திகேயன் சில பஞ்ச் வசனங்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தேவதாஸர்கள் கரவொலி எழுப்பியும் விசிலடித்தும் தங்கள் மனவேதனையைப் போக்கிக் கொண்டார்கள்.

    ”திரிஷா இல்லைன்னா திவ்யா” காலத்திலும் கா.தோல்வியில் தத்துவப்பாடல் கேட்கும் க்ரூப் என்று தெரிகிறது.

    ஒரு சீனில் காதல் தோல்வியடைந்து விரக்தியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையே “காதல் தோல்வி மருந்து” சாப்பிடு என்று காசு கொடுப்பது முகம் சுளிக்க வைக்கும் சீனாக இருக்கிறது. குடிக்கும் போதும் புகைபிடிக்கும் போதும் “உடல் நலத்திற்கு தீங்கானது” என்று சப்டைட்டில் போடுவோர் இது போன்று குடி மேல் மோகத்தைத் தூண்டும் காட்சிகள் வரும்போது திரையின் பாதத்தில் “இது மனநலத்திற்கு தீங்கானது” என்றும் போடவேண்டும்.

    காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்து வைத்த ஆட்டம். கிராமங்களில் நடக்கும் ஆடல்,பாடல் நிகழ்ச்சியின் ஸ்ட்ரிப் டீஸ் வகையறா யோக்யதையை தைரியமாகக் காண்பித்ததற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

    இமானின் இசை. கரகாட்டக்காரனின் முந்தி முந்தி விநாயகரே பாடலுக்கு கரோகி கொடுத்தது போல ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடல். அந்த டர்டர்ரென்று உருமும் உருமி முதல்கொண்டு அப்படியே. ஊதா கலரு ரிப்பன் ஹிட். கேஷுவலான பாடல். ரெண்டு மாசம் கேட்கலாம். அப்புறம் காது மடங்கிக்கொள்ளும். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை. கும்கியின் வாசனை பல பாடல்களில் இருக்கிறது.

    நான் கடவுளில் வரும் டிஎம்டி இரும்புக் கம்பி தேக மொட்டைத்தலையர் இந்தப் படத்தில் காது குடைந்துகொண்டே வருகிறார். எதுவும் வலுவான காரணமில்லாமல் சிவனாண்டி சத்தியராஜும் இன்ன பெயர் என்று காதில் விழாத அந்த மொ.தலையரும் அடித்துக்கொண்டு “உன் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடிடுவாடா” என்று சாபம் கொடுக்கிறார் மொ.தலையர். அதைப் பொய்யாக்க தன்னுடைய இரண்டு பெண்களையும் பள்ளிப்பருவத்திலேயே மணம் முடித்துக்கொடுக்கிறார். மூன்றாமவள்தான் படத்தின் ஹீரோயின். அவளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்.......

    இதற்குமேல் படத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. நேரத்தை விரயம் செய்ய முடிந்தவர்கள் வருத்தப்படாமல் வாலிபம் பொங்கப் பார்க்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai