எந்த அரசும் திரைப்படத்துறைக்கு நன்மை செய்யவில்லை என்றார் நடிகர் கமல்ஹாசன்.
சந்தானம், சேது, விசாகா, நஷ்ரத் நடிப்பில் உருவாகி வரும் படம் "வாலிபராஜா'. எச். முரளி தயாரிப்பில் கே.வி.ஆனந்தின் உதவியாளர் சாய் கோகுல் ராம்நாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இசை குறுந்தகட்டை நடிகர் கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது:
இளம் தலைமுறையை வாழ்த்துவதைப் பின்பற்றாதவர்கள் யாரும் பிற்காலத்தில் பெருமை பெற்றவர்களாக இருக்க முடியாது. இளைஞர்களை வாழ்த்த வேண்டும் என சொல்லிக் கொடுத்தவர் கே.பி.சார்தான். அவரும் இன்று வரை இளைஞராகத்தான் இருக்கிறார். "உத்தம வில்லன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் எப்போதும் வயதைப் பார்ப்பதில்லை. யார் கற்றுக் கொடுத்தால் என்ன? எனக்கு என் வேலை ஆக வேண்டும்.
திரையுலகத்தை இப்போதும் நான் வியப்போடுதான் பார்க்கிறேன். இங்கே ஏராளமானோர் உழைக்கிறார்கள். திறமைசாலிகளும் இருக்கிறார்கள். அதே நேரம் பலர் காணாமல் போகிறார்கள். எந்தச் சீட்டை குலுக்கிப் போட்டு நான் இங்கே வந்தேன் என்று தெரியவில்லை.
"அரங்கேற்றம்' படத்தில் நடித்து முடித்த பல நாள்களுக்குப் பின் ஒரு நாள் சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன். அப்போது காரில் போன கே.பி.சார், இராம. அரங்கண்ணல் இருவரும் காரை நிறுத்தி என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ""ஆபீஸூக்கு வந்துரு...'' என்றார்கள். நண்பர் ஸ்ரீகாந்தின் கால்ஷீட் கிடைக்காததால்... ""அதற்காக ரோட்டில் போகிறவனையெல்லாமா நடிக்க வைக்க முடியும்...'' என்று பாலசந்தர் சார் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் சாலையில் நடந்துபோய்க் கொண்டிருந்த என்னைப் பார்த்தாராம். அதனால்தான் அந்தச் சிரிப்பு.
அன்று அந்த சாலையில் நான் நடந்து போகாவிட்டால், எனக்கு "அவள் ஒரு தொடர்கதை' பட வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது. நடுத்தெருவில் கிடைத்த அந்த வாய்ப்பை நான் மறக்கவில்லை.
பழைமை மறந்து போனால் வாழ்வும் மறந்து போகும். சினிமா ஒரு வியத்தகு உலகம். அதில் நான் எப்படி விழுந்தேன் என்பதுதான் தெரியவில்லை. தாத்தா, அப்பா வழியில் சட்டம் படித்திருந்தால் இன்று பல குற்றவாளிகளை நிரபராதியாக்கி இருப்பேன். நான் இந்தச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேனா? இல்லை சினிமா என்னைத் தேர்ந்தெடுத்ததா? என்பது விளங்கவில்லை. தோல்வி அடைந்தவர்களை என்றைக்கும் உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வெற்றி பெற்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
அரை நூற்றாண்டுகளாக இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் எந்த அரசும் சினிமாவுக்கு நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை; இந்தியா முழுவதும் இருக்கிற அனைத்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன். ஆனாலும் இந்த சினிமா இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தடைபடமால் நடைபோட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்றார் கமல்ஹாசன்.