சுடச்சுட

  
  vadivelu

  என்னை மீண்டும் அரசியலுக்கு இழுக்காதீர்கள் என தெரிவித்தார் நடிகர் வடிவேலு. நகைச்சுவையின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் மகிழ்விப்பதே இனி என் வேலை என்றும் அவர் தெரிவித்தார்.

  ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "தெனாலிராமன்'. அரசியல் பிரவேச சர்ச்சைகளையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் வடிவேலு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் களம் காண்கிறார். வடிவேலு இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்துக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார். டி.இமான் இசையமைப்பில் யுவராஜ் தயாளன் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இசை குறுந்தகட்டை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வெளியிட, வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

  விழாவில் நடிகர் வடிவேலு பேசியது:

  சினிமாவில் எனக்கு ஏற்பட்ட இடைவெளி என்பது காலத்தின் கட்டாயம். 3 ஆண்டுகள் ஓய்வு என்பது எனக்கு கிடைத்த சந்தோஷம். இந்த இடைவெளியில் என்னைத் தேடி நிறைய படங்கள் வந்தன. அவற்றில் சிறந்த படத்தை தேடிக் கொண்டிருந்தேன். மீண்டும் வரும் போது "கிங்'காக வர வேண்டும் என எண்ணினேன்.

  என்னை வைத்து மீண்டும் படம் தயாரிக்க பலர் தயங்கினார்கள்; பயந்தார்கள். அந்த நேரங்களில் மலையாளம் உள்ளிட்ட பல சினிமாக்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவை எவற்றையும் ஏற்கவில்லை. அப்படி ஏற்று நடித்திருந்தால் "வடிவேலு ஊரை விட்டு ஓடி விட்டான்' என பெயர் கட்டியிருப்பார்கள். அதனால்தான் அவற்றை ஒப்புக் கொள்ளவில்லை. "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'க்குப் பிறகு எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கதை "தெனாலிராமன்'. இயக்குநர் யுவராஜ் சொன்ன கதையை கேட்ட கல்பாத்தி அகோரம்தான் என்னை இதில் நடிக்க வைக்க விரும்பினார்.

  பலர் அவருக்கு பயமூட்டினார்கள். நல்ல கலைஞன் வடிவேலு என தயாரிப்பாளர் அகோரம்தான் துணிச்சலாக இப்படத்தை தயாரிக்க முன் வந்தார். அவருடைய அந்த துணிச்சலுக்கு ஏற்ப இந்தப் படத்தில் என் உழைப்பை கொடுத்திருக்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு காமெடி வந்திருக்கிறது. எனக்கு சம்பளம் வேண்டாம் என்கிற அளவுக்கு இதில் நடிக்க முன் வந்தேன். யாரும் செய்யக் கூடாத தவறையா நீ செய்து விட்டாய் என எனக்கும் துணிச்சல் தந்தார் தயாரிப்பாளர் அகோரம். என்னைப் போலவே சக நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் கடினமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். படத்தைப் பற்றி நாளுக்கொரு செய்திகள் வந்து கொண்டிருந்தன. செட்டை பிரித்தால் யூனிட்டே பிரிந்து விட்டது என்ற அளவுக்கு எழுதினார்கள். அதையெல்லாம் மீறி படம் வந்திருக்கிறது என்றார்.

  பின்பு, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வடிவேலு பேசியதாவது:

  "23-ம் புலிகேசி' படம் மாதிரியே இப்படத்திலும் எனக்கு இரட்டை வேடங்கள். மாமன்னன், தெனாலிராமன் என இரண்டு கதாபாத்திரங்களுமே காமெடியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு குடும்ப ரேஷன் கார்டிலும் என் பெயர்தான் இல்லை. மற்றபடி நான் எப்போதும் ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன். சமீபத்தில் வந்த எந்தப் படங்களையும் நான் பார்க்கவில்லை. கவுண்டமணி, சந்தானம் உள்ளிட்டோரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். அவர் வந்து விட்டார், அவர் இதை செய்து கொண்டிருக்கிறார் என மற்றவர்களை பற்றி நினைத்துக் கொண்டால் சினிமாவில் ஜொலிக்க முடியாது. எல்லோரும் அவரவர்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தால் பிரச்ûனையே இல்லை.

  இந்தப் படத்தில் ஓரிடத்தில் "லட்சியம் நிறைவாகும் வரை மறைவாக இருத்தலே, உலகின் அனைத்து போராளிகளுக்கும் நியதி' என்கிற ஆரூர்தாஸின் வசனம் எனக்குப் பொருந்துவதாக இருக்கும். மீண்டும் அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள். நகைச்சுவையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விப்பதே இனி என் வேலை என்றார் வடிவேலு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai