சுடச்சுட

  
  dhandapani

  நடிகர் "காதல்' தண்டபாணி (71) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார்.

  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காலை 6.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

  "சண்டமாருதம்' படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் தண்டபாணி நடித்து வருகிறார். சனிக்கிழமை மாலை அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வடபழனியில் அவர் தங்கி இருந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

  திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்த தண்டபாணி பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார்.

  கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான "காதல்' படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானார். அதில் அவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்ததால் "காதல்' தண்டபாணி என அழைக்கப்பட்டார்.

  சித்திரம் பேசுதடி, வேலாயுதம், முனி, மருதமலை உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

  அவரது மனைவி அருணா, 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், லெனின், விமலாஜித்தன், பழனிகுமார் என்ற மகன்களும் உள்ளனர்.

  அவரது இறுதிச்சடங்கு திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai