Enable Javscript for better performance
கவுண்டமணியுடன் இணைந்து பிரசாரமா? நடிகர் செந்தில்- Dinamani

சுடச்சுட

    
    comedian-senthil

    காமெடி நடிகர்கள் செய்யும் தேர்தல் பிரசாரம் வாக்காளர்களிடம் எடுபடுகிறதா?
     காமெடி நடிகர்கள் திரையில் மட்டுமே காமெடி செய்பவர்கள். ஆனால், தேர்தல் பிரசாரம் போன்ற மிகவும் கடுமையான களங்களில் காமெடியாகப் பேசுவதுடன் சிந்திக்க வைக்கும் கருத்துகளையும் தெரிவிப்போம். எனது பிரசாரம் மற்ற காமெடி நடிகர்களின் பிரசாரத்தை விட வித்தியாசத்துடனேயே இருந்து வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், திமுகவும் செய்த துரோகங்களை ஆதாரங்களுடன் மிகவும் கடுமையான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அரசியல்வாதிகள் மேடையில் கூறுவது போன்று கூறுவதில்லை. சாதாரண பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் காமெடி கலந்து பேசுகிறேன். அதாவது, கசக்கும் மருந்தில் சற்று தேன் தடவுவது போன்று, மக்களுக்குப் புரியும் பாஷையில் பேசி வருகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
     அதிமுக எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
     அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில், சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்த காலத்தில் இருந்தே அந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறேன். அப்போது எனது முதல் பிரசாரம் திருச்சியில் தொடங்கியது. இப்போது வரை அதிமுகவுக்கு ஆதரவாகப் தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன். வேறு அணியோ, கட்சியோ மாறியது கிடையாது.
     மற்ற காமெடி நடிகர்களின் பிரசாரம் எப்படி இருக்கிறது?
     ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அதிமுகவில் என்னுடன் பிரசாரத்தில் ஈடுபடும் சிங்கமுத்துவும், பிற நடிகர்களான குண்டுகல்யாணம், ராமராஜன் போன்றோரும் விதவிதமான ஸ்டைலில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களின் பிரசாரம் நன்றாக எடுபடுகிறது.
     சினிமாவில் இணை பிரியாத ஜோடிகளாக நீங்களும், கவுண்டமணியும் இருந்தீர்கள். தேர்தல் களத்தில் நீங்கள் இரண்டு பேரும் இணைந்து பிரசாரம் செய்ய விருப்பம் இருக்கிறதா?
     நாங்கள் இருவரும் இணைவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஆனால், நானும், கவுண்டமணியும் இணைந்து நடித்த காமெடிக் காட்சிகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். குறிப்பாக, ராஜகுமாரன் படத்தில் கவுண்டமணி பால்காரனாகவும், நான் தபால்காரனாகவும் வருவேன். அந்தப் படத்தில் கருப்பாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்யாமல் இருவரும் ஓடுவோம். அதுபோன்று, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர விருப்பமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் ஓடுகின்றன. இதை அந்தக் காமெடி காட்சியுடன் இணைத்துச் சொல்லி வருகிறேன். எனவே, கவுண்டமணி என்னுடன் பிரசாரத்தில் இல்லாவிட்டாலும் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளைச் சொல்லும் போது அதற்கு வாக்களர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai