Enable Javscript for better performance
ஓ காதல் கண்மணி - விமரிசனம்- Dinamani

சுடச்சுட

  

  மும்பையில் நடக்கும் கதை. துல்கரும் நித்யா மேனனும் காதல் வசப்படுகிறார்கள். கல்யாணம் என்கிற குடும்பப் பந்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் சுதந்தரமாக வாழ வேண்டும் என்கிற எண்ணமும் கொண்டவர்கள். தொழில்ரீதியாக ஆளுக்கொரு கனவு உண்டு. அதனால், இருவரும் வெளிநாடு செல்லும்வரை ஒன்றாக வாழ்வோம் என்று முடிவெடுத்து, அதன்படியே வாழ்கிறார்கள். (கதை மும்பையில் நடக்கிறது என்பதை மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்). இருவரும் வெளிநாட்டுக்குச் செல்லும் தருணம் வரும்போதுதான் தூய்மையான அன்பை உணர்கிறார்கள். எப்படிப் பிரிவது என்கிற தயங்குகிறார்கள். முடிவு, சுபம். 

  O Kadhal Kanmani7.jpg 

  இளமையான படம் என்றால் அது மணி ரத்னம் படம்தான் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்படுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் கண்ணைப் பறிக்கும் இளமை. ரஹ்மானின் பாடல்கள், மயக்க நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றன. படம் முழுக்க குட்டிக் குட்டிப் பாடல்கள். எத்தனை பாடல்கள் இருந்தாலும் அதை எப்படி கதையுடன் பயணிக்கவைப்பது என்பதற்கு இந்தப் படமே ஓர் உதாரணம். இசை ரீதியாக அனுபவிக்க இது ஒரு சிறந்த படம்.

  வயதான தம்பதியரின் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கும் துல்கரும் நித்யா மேனனும், லிவ் இன் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்கிறார்கள். இதனால் உண்டாகும் சமூக ரீதியிலான பிரச்னைகளை மணி ரத்னம் கண்டுகொள்ளவில்லை. துல்கரின் அண்ணன், அண்ணி மட்டும் நாடகப் பாணியில் லைட்டாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்றபடி, இதுபோன்ற ஒரு உறவில் இருப்பவர்கள் மனரீதியாக எந்த அளவுக்குச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார் மணி. இதற்கு மாற்றாக, பிரகாஷ் ராஜ் - லீலா தம்பதியினரின் உணர்வுபூர்வமான பந்தமும் இன்னொரு பக்கமும் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்து துல்கரும் நித்யாவும் திருந்துகிறார்கள் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும், அந்தத் தம்பதியர் உண்டாக்கும் தாக்கம்தான் கிளைமேக்ஸை நிர்ணயிக்கிறது.

  இந்த இரண்டு உறவுகளும் படம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் காண்பிக்கப்படுகிறார்கள். காதலர்கள் கொஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள். வயதான தம்பதியர் அன்பைப் பொழிந்துகொண்டே இருக்கிறார்கள். அதுதான் கதையின் பலவீனம். ஏதோவொரு திருப்பம் ஏற்பட்டு, புதிய பாதையில் கதை பயணிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால் 'மன மன... மென்டல்' மனத்தில் பாட்டைப் போட்டு படத்தை முடித்துவிடுகிறார்கள்.

  வழக்கமாக, மணி ரத்னம் படங்களில் உள்ளதுபோல் மற்றுமொரு இளமையான நாயகன், துல்கர். குறையே சொல்லமுடியாதபடி அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன், வீடியோ கேம் துறையில் உள்ளவர் என்று ஒரு வரியில் சொல்லாமல், அவருடைய பணியும் சற்று விரிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ கேமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் சுவாரசியம். சரியான குடும்பப் பின்னணி இல்லாமல் சுதந்தரமாக வாழும் கதாபாத்திரம். நித்யா மேனனுடையது. துல்கரை விடவும் இவருக்குத்தான் நடிப்பை அதிகம் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம். எல்லாக் காட்சிகளிலும் பளிச் என்று இருக்கிறார். க்ளோசப்களில் தேவதை.

  கதையில் மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள்தான். நாயகியின் அம்மா சும்மா உதார் விடுகிறார். அவருடைய கதாபாத்திரம் பலமாக அமைக்கப்பட்டிருந்தால், கதைக்கு நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். காமெடிக்கு என்று படத்தில் யாரும் இல்லை. வசனங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். பிரகாஷ் ராஜ் - லீலா தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் அன்பு வழிந்தோடுகிறது. இருவரும் நிறைவாக நடித்துள்ளார்கள்.

  படம், நவநாகரிகமாக இருப்பதற்கு இசையும் ஒளிப்பதிவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு லொகேஷன்களையும் அவ்வளவு அற்புதமாக கண் முன் நிறுத்தியுள்ளார், பிசி. (இந்தப் படத்திலும் மணி ரத்னம் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை). படம் முழுக்க, எல்லாக் காட்சிகளிலும் காதலர்கள்தான் இருக்கிறார்கள். பெரிய திருப்பங்கள் இல்லாத ஒரு கதை. இந்த நிலையில் எடிட்டர் தவறு செய்துவிட்டால் அவ்வளவுதான். பலவீனமாக செல்லும் இரண்டாம் பாதியில் பெரிய அலுப்பு ஏற்படவில்லை. இதற்குக் காரணம், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்.

  யாராலும் சுலபத்தில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒரு கதைதான். ஆனால், மும்பையில் வசிக்கும் மேல் வர்க்கத்தை சேர்ந்த காதலர்களையும் அவர்களுடைய மனப் போராட்டங்களையும் முன்வைக்கிறார் மணி ரத்னம். இரண்டாம் பாதியில் சரியான திரைக்கதை இல்லாமல் போனாலும், இளமையான காதலர்கள், துள்ளலான காட்சிகள், அமர்க்களமான பாடல்கள் போன்றவற்றால் படம் ஓகே என்கிற ஒரு மனநிறைவு ஏற்பட்டுவிடுகிறது.

  ஆனால் நாயகன், மெளன ராகம் படங்களில் இருந்த ஒரு தரம், அந்த மணி ரத்னம் இந்தப் படத்திலும் இல்லை என்பதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

  - தினமணி டாட் காம்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai