ஃபத்வா குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம்

பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன்.
ஃபத்வா  குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம்

முஹம்மது நபியின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்' என்கிற இரானிய மொழி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்தது.

ஃபத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் சயீத் நூரி இதுபற்றி கூறும்போது, இந்த தலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லையென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அது நபிகளுக்கு அவமதிப்பாகும் என்றார். இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியதாவது:

‘நான் இந்தப் படத்தை இயக்கவே தயாரிக்கவோ இல்லை. இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் படத்தில் பணிபுரிந்ததால்  எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை.

ஒருவேளை அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்துக்கு சேவை செய்வது குறித்த கொள்கையை விளக்கும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வேன்? நல்லெண்ணத்தில் தான் இரானிய படத்துக்கு இசையமைத்துள்ளேன். இரானிய படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். மத சுதந்தரம் உள்ள நம் நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.

பிரச்னையைக் கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. உலகில் துன்பத்தால் அவதிப்படுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பைப் பிரதிபலிப்பது போல பிரார்த்தனை செய்வோம்’ என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com