
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக, திரைப்பட இயக்குநர் சேரனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர், 2014-ஆம் ஆண்டு இயக்குநர் சேரனால் தொடங்கப்பட்ட சி.2.ஹெச் நெட்வொர்க்கில் (புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் தொழில்நுட்பம்) ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு பகுதிகளுக்கும் முகவராக சேர்வதற்காக ரூ. 8.40 லட்சத்தை சேரனுக்கு கொடுத்தாராம்.
இந்த நிலையில், முகவராக நியமிக்கப்பட்ட பழனியப்பனுக்கு ஒப்பந்தப்படி புதிய திரைப்படங்களை வழங்காமலும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தராமலும் சேரன் காலம்தாழ்த்தி வந்தாராம்.
இந்த நிலையில், பழனியப்பனுக்கு சேரனும், அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் இணைந்து ரூ. 8.40 லட்சத்துக்கான வங்கிக் காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து காசோலை மோசடி செய்ததாக சி.2.ஹெச் நிறுவனம், இயக்குநர் சேரன், அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகிய 3 பேர் மீது ராமநாதபுரம் 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் பழனியப்பன் கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 11, பிப்ரவரி 10, மார்ச் 10 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியும் சேரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி வேலுச்சாமி சேரனுக்கும், அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் பிடியாணை பிறப்பித்தும், ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.